சின்னவர் எங்கே? கைதாகும் எம்எல்ஏக்கள்.. கண்டுக்காத உதயநிதி.. கடுப்பில் திமுக உடன்பிறப்புகள்!
சென்னை: எதிர்க்கட்சி திமுகவுக்குள், உட்கட்சிப் பூசலும் உடன்பிறப்புகளின் அதிருப்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு முதன்மை காரணமாக அமைந்திருப்பது எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள்தானாம்.
அரசியல் களம் நாளுக்கு நாள் சூடேறிக்கொண்டிருக்கும் வேளையில், எதையும் நேரில் சென்று சந்திக்காமல், வெறும் அறிக்கைகளுடன் கடந்து போகிறார் என்ற குற்றச்சாட்டு கட்சி வட்டாரத்திலேயே வெடிக்கத் தொடங்கியுள்ளது.

வரிசையாகக் கைதாகும் எம்.எல்.ஏக்கள்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பதவியேற்றதில் இருந்தே, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன. முதல்வர் விஜய்யை விமர்சித்து தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் அன்று இரவே பிணையில் வெளிவந்தாலும், அந்த கைது சம்பவம் கட்சி வட்டாரத்தை உலுக்கியது.
அடுத்த சில நாட்களிலேயே, முதல்வர் விஜய்க்கு பகிரங்கமாக 'எலும்பை உடைப்பேன்' என மிரட்டல் விடுத்த வழக்கில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த இரு முக்கிய கைதுகளின்போதும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுத் தங்களின் கடமையை முடித்துக் கொண்டனர்.
பயத்தில் தொண்டர்கள்... தயங்கும் கட்சி நிர்வாகிகள்
பொதுவாக எதிர்கட்சியாக இருக்கும்போது, தங்கள் கட்சிப் பிரதிநிதிகள் அல்லது தொண்டர்கள் கைது செய்யப்பட்டால், தலைவர்கள் உடனடியாக நேரில் சென்று சிறையிலோ அல்லது காவல் நிலையத்திலோ சந்தித்து ஆதரவு தெரிவிப்பது வழக்கம். ஆனால், தலைமை தரப்பில் இருந்து எவ்வித நேரடி கள ஆதரவும் இல்லாததால், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தலைமையே நேரில் வரத் தயங்கும்போது, நாங்கள் எவ்வாறு ஆளும்கட்சிக்கு எதிராகத் துணிச்சலாகப் போராடுவது? என உடன்பிறப்புகள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.
அதிமுகவைக் கண்டு கற்கும் பாடம்
சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுக கூட, அரசின் மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்து வீதிக்கு வந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அப்படி இருக்கும்போது, மாநிலத்தின் பிரதான எதிர்கட்சியான திமுகவும், அதன் எதிர்கட்சித் தலைவரும் அறிக்கை அரசியலோடு தங்களை முடக்கிக்கொள்வது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.
விஜய் செய்த அரசியல்
திமுக ஆட்சிக் காலத்தில், தவெக தலைவராக இருந்த விஜய், சிவகங்கையில் காவல் நிலையக் காவலில் உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்திற்கு ஆதரவாக சென்னையில் பிரம்மாண்ட போராட்டத்தைக் களத்தில் இறங்கி நடத்தினார்.
ஆனால், தவெக ஆட்சியில் நாகர்கோவிலில் சபரி வர்மன் சிறைக்காவலில் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியபோது, உதயநிதி ஸ்டாலின் அந்த இடத்திற்கு நேரில் செல்லவே இல்லை. அதேபோல, கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூர சம்பவத்திலும், அவர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்காமல் அறிக்கை மட்டுமே வெளியிட்டார்.
எதிர்காலத் தலைமைக்கு ஏற்புடையதா?
மு.க. ஸ்டாலினுக்குப் பிறகு திமுகவின் அடுத்த முகமாக முன்னிறுத்தப்படும் உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் என்ற பொறுப்பின் அழுத்தத்தையும் முக்கியத்துவத்தையும் இன்னும் உணரவில்லையோ என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்துள்ளது. களத்திற்கு வந்து தொண்டர்களுக்குப் பாதுகாப்பாக நிற்காத ஒரு தலைவரை நம்பி, வரவிருக்கும் தேர்தல் களங்களில் எவ்வாறு இறங்குவது என்ற அதிருப்திக் குரல்கள் திமுகவுக்குள் தீவிரமடைந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications
