“டிஜிபி பேட்டியை பார்த்தா அவர் எதிரே அமர்ந்திருப்பவர்களே வாய்விட்டு சிரித்திருப்பார்கள்” - உதயநிதி
சென்னை: தவெக அரசின் சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்கப் புள்ளி விவரத்தின் பின் ஒளிந்துகொள்வதா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் 74 சதவீதம் கூடுதலாக வழக்குகளை பதிவு செய்திருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொலைகள் குறைந்துள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரித்து வருகிறோம் எனத் தெரிவித்தார் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் அளித்துள்ள பேட்டி, உண்மை நிலையை மறைப்பதாக அமைந்துள்ளது.
ஆளுங்கட்சிப் பிரமுகரைப் போல, "கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த 6 மாத ஆட்சியில் கொலைகள் குறைவுதான்" என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களில் குற்றச் செயல்களே நடக்காதது போலவும், சட்டம் ஒழுங்கு சீரும் சிறப்புமாக இருப்பது போலவும் அவர் அளித்திருக்கும் பேட்டியைப் பார்த்தால் அவர் எதிரே அமர்ந்திருப்பவர்களே வாய்விட்டு சிரித்திருப்பார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரிக் கொலை எண்ணிக்கையை, நடப்பாண்டின் 10 மாதச் சராசரியோடு ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்? தீபாவளி அன்று மட்டும் 17 உயிர்கள் பறிபோன நிலையில், டி.ஜி.பியே கொலைகள் குறைந்துவிட்டதாகக் கூறுவது ஆறுதல் அல்ல; அது நிர்வாகத்தின் அவலம்.
உண்மையிலேயே கொலைகள் குறைந்துவிட்டன என்றால், தீபாவளிப் படுகொலைகளுக்குப் பிறகு Dummy முதலமைச்சர் ஏன் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதில் ஏன் டி.ஜி.பி பங்கேற்க வேண்டும்.
"போதைப்பொருள் வழக்குகள் 74 சதவிகிதம் அதிகரித்துள்ளன" என்றும் டிஜிபி கூறியுள்ளார். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போதைப் பொருள் தங்கு தடையின்றிக் கிடைக்கிறது என்பதுதானே அதற்கு அர்த்தம்?
பள்ளிகள் வரை போதைப்பொருளும் கஞ்சாவும் தாராளமாகப் புழங்குவதால்தானே இத்தனை வழக்குகள் பதிவாகின்றன? 'நோய் முற்றிவிட்டது' என்பதை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, 'நாங்கள் அதிக மாத்திரைகள் கொடுக்கிறோம்' என்று பெருமை பேசுவது போல உள்ளது டி.ஜி.பியின் விளக்கம்.
137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த த.வெ.க. நிர்வாகி பூபாலனைத் தமிழக காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? ஒன்றிய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்துதானே அவரைக் கைது செய்தார்கள்? அப்படியென்றால் பூபாலனைப் பாதுகாத்தது யார்?
அரியலூரில் ரோந்துப் பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரரும், தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளரும் (SSI) போதை ஆசாமிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்களே, பிறகு எப்படிப் போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தினீர்கள்.
பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் படை அமைத்ததாக மார்தட்டிக்கொள்ளும் ஆட்சியில், ஆளுங்கட்சி நிர்வாகிகளே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வரிசையாகச் சிக்கி வருகின்றனர்.
த.வெ.கவினர் செய்யும் தவறுகள் சிங்கப்பெண் படையின் கண்களுக்குத் தெரியாதவாறு 'ஷீல்டு' (Shield) போடப்பட்டிருக்கிறதா? டி.ஜி.பி பேட்டி கொடுப்பதற்கு முன்பு, கடந்த ஒரு வார கால செய்தித்தாள்களை மட்டுமாவது படித்துவிட்டு வந்திருக்கலாம்.
கோவை காரமடையில் த.வெ.க பெண் நிர்வாகிக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளரே பாலியல் தொல்லை கொடுத்தார்.
த.வெ.க திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார்.
சென்னை, கோயம்பேடு நட்சத்திர விடுதியில் பணிபுரியும் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த த.வெ.க. மாவட்ட நிர்வாகிகள் இருவர் கைது.
எல்லாவற்றுக்கும் மேலாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த சர்ச்சை.
இவையெல்லாம் டி.ஜி.பி.யின் புள்ளிவிவரப் பட்டியலில் இடம்பெறாதது ஏன்? திருவைகுண்டம் முதல் கள்ளக்குறிச்சி வரை ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?
'த.வெ.கவால் பாதிக்கப்பட்டோர் வழக்குப் பிரிவு' என ஒன்றை டி.ஜி.பி அலுவலகத்திலேயே தொடங்கும் அளவுக்கு. ஆளுங்கட்சியினர் சட்டம் ஒழுங்கிற்குச் சவால் விடுகின்றனர்.
இத்தகைய சூழலில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக டி.ஜி.பி தனக்குத்தானே 'சுய சான்றிதழ்' (Self Certificate) கொடுத்துக்கொள்வது நகைப்புக்குரியது. கொலைகள் குறைந்துவிட்டதாக மூடிமறைக்கும் காவல்துறையால், தங்கள் கட்டுப்பாட்டில் (Custody) இருக்கும் கைதிகளைக்கூடப் பத்திரமாகப் பாதுகாக்க முடியவில்லை.
காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த 6 மாதங்களில் தப்பியோடிய கைதிகள் குறித்த புள்ளிவிவரத்தை டி.ஜி.பி. வெளியிடுவாரா?
குற்றங்களின் எண்ணிக்கையைப் பிரித்துக் காட்டிப் பெருமிதம் கொள்வதால் களத்தில் மக்களின் அச்சம் குறைந்துவிடாது. ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களையும், போதைப்பொருள் நடமாட்டத்தையும், நிர்வாகத் தோல்விகளையும் வெறும் சதவிகிதக் கணக்குகளால் மறைக்க முடியாது.
புள்ளிவிவர வித்தைகளை விட்டுவிட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களின் உண்மையான பாதுகாப்பைக் களத்தில் உறுதி செய்ய காவல்துறை முன்வர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
