உதயநிதி ராசிக்கு லாப ராகு.. தொழில் சனி.. விரைய குரு.. துணை முதல்வராகும் யோகம் எப்படி?
சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜோதிட ரீதியாக உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தில் கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அவருக்கு துணை முதல்வராகும் யோகம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
உதயநிதி ஸ்டாலின்: எனது குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார் முதல்வர் ஸ்டாலின். திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவிற்குப் பிறகு தலைவராக பொறுப்பேற்றார் ஸ்டாலின். அவரை பின் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அரசியலில் அடி எடுத்து வைத்தார். இளைஞரணி செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர் என படிப்படியாக பதவிகள் குறுகிய காலத்திலேயே உதயநிதியை தேடி வந்தன.

உதயநிதி ஜாதகம்: அவரது ஜாதகத்தில் தலைவராகும் தகுதி இருப்பதாலேயே உதயநிதியை தேடி பதவியும் பொறுப்புகளும் வந்துள்ளதாக ஜோதிடர்கள் கூறியுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தில் கோடி மக்களில் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கக் கூடிய கிரகமாலிகா என்ற யோக அமைப்பு இருப்பதால்தான் அவருக்கு தலைவராகும் தகுதியும் தேடி வரும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் மாலை போன்ற அமைப்பில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமைந்திருப்பது கிரக மாலிகா யோகம் என்று சொல்லப்படுகிறது.
உதயநிதி ராசி நல்ல ராசி: உதயநிதி ஸ்டாலின் 1977ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்திருந்திருக்கிறார். மேஷ லக்னம் ரிஷப ராசி. மேஷம் லக்னம் ரிஷபம் முதல் தனுசு வரை எட்டு கிரகங்கள் வரிசையாக அமர்ந்துள்ளன. இந்த யோகம் ஒரு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும். ரிஷபம் சந்திரன், மிதுனம் குரு கடகம் செவ்வாய் சிம்மத்தில் சனி கன்னியில் ராகு துலாமில் ஆட்சி பெற்ற சுக்கிரன் விருச்சிகத்தில் சூரியன் தனுசு ராசி புதன் என கிரகங்கள் ராசிகளில் வரிசையாக அமர்ந்துள்ளன. நவ கிரகங்களில் ராகு, கேதுவைத் தவிர மற்ற ஏழு கிரகங்களும் வரிசையாக ஏழு வீடுகளில் இருந்தால் அது கிரகமாலிகா யோகம் எனப்படும். இந்த யோக அமைப்பில் பிறந்தவர்களுக்குப் நாற்பது வயதிற்கு மேல் பேரும் புகழும் வசதியும், உயர் அந்தஸ்தும் பெருகும்.
எதிர்காலம் எப்படி: உதயநிதியின் ஜாதகத்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த பிரபல ஜோதிடர் ஒருவர் இவருக்கு வளமான பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றும். இவர் அதிர்ஷ்டகரமானவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் அப்பாவை விட புகழ்பெறுவார். தாத்தாவைப் போல சிறந்த வெற்றி பெறுவார் என்றும் கூறியிருக்கிறார். அதன்படியே கடந்த சில ஆண்டு காலமாக உதயநிதி விசயத்தில் நடந்து வருகிறது. 1982ஆம் ஆண்டு முதல் 2017 வரை தன் வசம் வைத்திருந்த இளைஞரணி செயலாளர் பதவியை கடந்த 2019ஆம் ஆண்டு தனது மகனுக்கு அளித்து அழகு பார்த்தார் ஸ்டாலின்.
அரசியலில் வெற்றி: வாரிசுகள் சினிமாவிலோ அரசியலிலோ நுழைவது எளிது. அதே நேரத்தில் அவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஜெயிக்க முடியும். அதேபோலத்தான் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் ஓராளவு ஜெயித்த பின்னர் அரசியலில் அடி எடுத்து வைத்தார் உதயநிதி. நாற்பது வயதிற்கு மேல் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கிடைத்தது.
தசாபுத்தி எப்படி: உதயநிதி ஸ்டாலினுக்கு சனி மகாதிசை தற்போது நடைபெறுகிறது. புதன் புத்தியில் இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்தது. 2021ஆம் ஆண்டு மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்றார். கடந்த 2022ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சரானர். அப்போதிருந்தே அவர் துணை முதல்வராக பொறுப்பேற்பது எப்போது என்ற கேள்வி எழுந்தது.

தொழில் சனி, லாப ராகு: ரிஷப ராசியில் பிறந்த உதயநிதி ஸ்டாலினுக்கு சனி தற்போது பத்தாமிடத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார் சச மகா யோகம் தேடி வந்துள்ளது. அதே போல ராகுவும் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குரு பகவான் விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டில் இருந்தாலும் மே மாதம் முதல் ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். எனவேதான் அவருக்கு விரைவில் துணை முதல்வர் பதவியை அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் ஆதரவு எப்படி: ஒருவரிடம் மனிதநேயம், ஆளுமைத்திறன், திறமை, மக்கள்செல்வாக்கு, வசியம், ராஜ தந்திரம், முற்போக்குச் சிந்தனை, தொண்டர்கள் இவையெல்லாம் சேர்ந்தால்தான் தலைவனுக்கு உரிய தகுதியைப் பெறமுடியும். சூரியன் ஆளுமைத்திறனுக்கும், செவ்வாய் மனிதநேயத்திற்கும், குரு சந்திரன் மக்கள் செல்வாக்கிற்கும் புதன் ராஜ தந்திரத்திற்கும் சனி தொண்டர்களின் ஆதரவையும் பெற்றுத்தரும்.
உதயநிதியின் வசீகரம்: பொதுவாகவே, சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சந்திரன், புதன், சனி ஆகிய கிரகங்களை அரசு கிரகங்கள் என்பார்கள். இந்த கிரகங்கள் அனைத்தும் ஜாதகத்தில் முழுமையான பலம் பெற்று இருந்தால், உலகம் போற்றும் உத்தமத் தலைவன் என்ற பெயர் எடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பெற முடியும்.நாலாம் பாவம் நாலாம் அதிபதி குரு சூரியன் செவ்வாய் பதவி பற்றி சொல்லும். நாலாம் பாவத்தில் சூரியன் இருந்தால் 40 வயதுக்கு மேல் ஜாதகர் நல்ல வளர்ச்சி அடைவார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
யோக காலத்தில் பதவி: ஒருவரின் ஜாதகம் எத்தனை யோகமானதாக இருந்தாலும் அவருக்கு தசா புத்தி சரியானதாக இருக்க வேண்டும். ரிஷப ராசியில் பிறந்த உதயநிதிக்கு தற்போது சனி பகவான் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். குரு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார் மே மாதம் பெயர்ச்சியாகி ரிஷப ராசிக்கு வருகிறார். இன்று இளைஞரணி செயலாளராக, அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தை பூசத்திற்கு முன்: ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. அது முடிந்து சில நாட்களில் அதாவது வளர்பிறை காலத்திலேயே தை பூசத்திற்கு முன்பாகவே உதயநிதிக்கு துணைமுதல்வர் என்ற மகுடம் சூட்டப்பட வாய்ப்பு உள்ளது. அனைவருமே முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம் என்று உதயநிதி கூறினாலும் அவர் துணை முதல்வராவது உறுதி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். சமூக வலைத்தள பக்கங்களில் இன்று முதலே கொண்டாட்டங்களை தொடங்கி விட்டனர்.
மக்கள் செல்வாக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் ஆதரவு இருப்பதைப் போல மக்கள் ஆதரவும் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். தாத்தா கருணாநிதியைப் போலவும் எம்ஜிஆர், ஜெயலலிதா, கட்சித்தொண்டர்களையும் மக்களையும் வசீகரிக்க வேண்டும். உதயநிதியின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பார்த்தால் உதயநிதி விரைவில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக மாறுவார் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications