“ஹை ஃபைவ் ஆக மாற்றிவிட்டார் உதய் அண்ணா”- உற்சாகத்தில் வேளச்சேரி நீச்சல் வீரர்கள்
சென்னை: மறு உயிர் பெற்றிருக்கிறது வேளச்சேரி ஜிம்னாஸ்டிக் அரங்கம். தினம் தினம் இந்த அரங்கம் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வராதா என ஏங்கிய விளையாட்டு வீரர்களின் முகத்தில் ஒரு லட்சம் வாட்ஸ் வெளிச்சம் மகிழ்ச்சியாகப் பூத்துக் கொட்டுகிறது.
சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த அரங்கத்தை நவீன உபகரணங்களைக் கொண்டு புதுப்பித்துக் கொடுத்துள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

கோரிக்கை வைத்த ஒரு சில வாரங்களிலேயே இந்த மாற்றம் செய்து தரப்படும் என்று அங்குப் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களே முதலில் நம்பவில்லை. ஆனால், அந்த அதிசயம் நடத்தது. இன்று அங்கு அரங்கம் முழுக்க உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

"ஒருநாள் இந்த அரங்கத்தைச் சோதனை செய்ய வந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது இங்குள்ள பயிற்சியாளர்களிடமும், வீரர்களின் பெற்றோர்களிடமும் குறைகளைக் கேட்டு அறிந்தார். என்னென்ன வேண்டும்? என்ன செய்யலாம்? எனக் கலந்தாலோசனை செய்தார்.

பயிற்சியாளர்களும் பெற்றோர்களும் ஒருமித்த குரலில், இந்த ஜிம்னாஸ்டிக் அரங்கத்தைக் காலத்திற்கு ஏற்ற மாதிரி நவீனமாக மாற்ற வேண்டும் என்றோம். அதற்குப் புதிய உபகரணங்களை வாங்க வேண்டும் என்றோம். அவர் வந்து பார்க்கும்போது எந்தவிதமான நவீன வசதிகளையும் இந்த பயிற்சி அரங்கம் பெற்றிருக்கவே இல்லை" என்கிறார் இங்குப் பல ஆண்டுகளாகப் பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளர் ஒருவர்.

இந்த வேளச்சேரி உள் விளையாட்டு அரங்கம் 1995இல் 11.32 கோடி ரூபாயில் கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து நீச்சல் போட்டிகளைக் கண்டு ரசிக்கலாம். கூடுதலாக இங்கு உடற்பயிற்சி மையம் மற்றும் ஜிம்னாஸ்டிக் உள் அரங்க கூடமும் உள்ளது.

ஆனால், கடந்த காலங்களில் இந்த அரங்கம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. நவீனக் காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்படவும் இல்லை என மக்கள் குறைகூறி வந்தனர்.
இதனையடுத்துதான் உதயநிதி ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். அப்போது பாழடையும் தோற்றத்தில் காட்சியளித்த உள்விளையாட்டு அரங்கை 1.50 கோடி செலவில் நவீன உபகரணங்களை வாங்கிக் கொடுத்துப் புதுப்பித்தும் கொடுத்துள்ளார்.

இன்றைக்கு உதயநிதியினால், தரம் மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகளை உள்ளடக்கிய ஜிம்னாஸ்டிக் அரங்கமாக இது மாற்றம் அடைந்திருக்கிறது. அதற்கான திறப்பு விழாவையும் விரைந்து நடத்தி மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது இங்கே வரும் இளம் நீச்சல் வீரர்கள் மற்றும் ஜிம்னாஸ்டிக் வீரர்கள் மிகுந்த சந்தோஷ கடலில் தினம் நீந்தி மகிழ்ந்துவருகிறார்கள்.

"இந்த உள்விளையாட்டு நீச்சல் குளத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நான் நீச்சல் கற்றுவருகிறேன். ஆனால், முறையான பராமரிப்பு வசதிகள் இல்லாமல் இருந்தது. இப்போது உதய் அண்ணாவிடம் கோரிக்கை வைத்த சில நாட்களிலேயே இந்த அரங்கம் புத்தம் புதியதாக மாறி இருக்கிறது.
இங்கு நீச்சல் பழக வரவே இப்போது உற்சாகமாக உள்ளது. அந்தளவுக்கு அரங்கம் பவர்ஃபுல் ஆக மாற்றித் தந்திருக்கிறார் மினிஸ்டர்" என்கிறார் ஒரு இளம் பெண் நீச்சல் வீரர் .

அதேபோல் குரூப் ஆக நீச்சல் பழகி வரும் சில இளம் பெண் வீரர்கள், "முன்பு எல்லாம் இங்கு முறையான பாதுகாப்பு சாதனங்கள் எல்லாம் எதுவுமே இல்லை. ஆகவே, நாங்கள் பயந்து பயந்து தற்காப்பு உபகரணங்கள் இல்லாமல்தான் நீச்சல் பழகி வந்தோம்.
ஆனால், இப்போது எல்லா உபகரணங்களையும் உதய் அண்ணா வாங்கிக் கொடுத்திருக்கிறார். செம ஹேப்பியா இப்போது நீச்சல் பழகிவருகிறோம். தாங்க்ஸ் உதய் அண்ணா" என்கிறார்கள் ஒருமித்த குரலில்.
"முன்பு இங்குள்ள கம்பிகள் எல்லாம் பழுதாகி இருந்தது. அதைப் பிடித்து பயிற்சி மேற்கொள்ளும் போது காயங்கள் ஏற்பட்டன. அதைத் தொடவே ஒரு அச்சம் வரும். ஆனால், இப்போது எல்லாம் புதிய உபகரணங்களாக மாற்றித் தந்திருக்கிறார்கள். எந்தப் பயமும் இல்லாமல் விளையாடி வருகிறோம்" என்கிறார் இன்னொரு நீச்சல் வீரர்.

அதேபோல் இங்கு பயிற்சி பெற்றுவரும் இன்னொரு பெண். "இதற்கு முன்னாள் இங்கே கழிப்பறை வசதிகள் கூட இல்லை. நாங்கள் அதற்காக ஒவ்வொருமுறையும் நீச்சல் உடையை அகற்றிவிட்டு பொதுவான உடையை அணிந்து கொண்டு பக்கத்தில் உள்ள கழிவறைக்குத்தான் சென்று வருவோம். அது எங்களுக்கு மிக மிகத் தர்மசங்கடமாக இருந்தது.
இதே நீச்சல் உடையுடன் அரங்கைவிட்டு வெளியேவும் செல்ல கூச்சமாக இருக்கும். அதை நாங்கள் அமைச்சர் உதய் அண்ணாவிடம் சொன்னோம். அவர் இப்போது முறையான கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளார். இப்போது பெரிய விடுதலையே கிடைத்த உணர்வு வந்துள்ளது" என்கிறார்.
இங்குத் தனது மகனை நீச்சல் பயிற்சிக்குக் கொண்டுவந்துவிடும் ஒருவர், "மிக மோசமான நிலையில் இந்த நீச்சல் குளம் இருந்தது. நாங்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கையை அமைச்சர் உதயநிதிதான் நிறைவேற்றித் தந்துள்ளார்" என்கிறார்
இந்த வேளச்சேரி அரங்கம் பல வழிகளில் வீரர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. அதற்கு இங்கே அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான உபகரணங்களே சாட்சி.












Click it and Unblock the Notifications