"லவ் டுடே" .. செல்போனை மாத்திக்கலாமானு கேட்ட துர்கா ஸ்டாலின்.. முதல்வர் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: லவ் டுடே படம் பார்த்துவிட்டு கணவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் போனை மாற்றிக் கொள்ளலாமா என துர்கா ஸ்டாலின் கேட்டதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கிய லவ் டுடே படம் கடந்த வாரம் வெளியானது. இது அவருக்கு இரண்டாவது படம். இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
மேலும் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் பிரதீப் இந்த படத்தில் ஹீரோவாக முதல் முறையாக நடித்திருந்தாலும் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

ரஜினிகாந்த் பாராட்டு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதீப்பை அழைத்து பாராட்டினார். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த படம் தற்போது வரை 35 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. இந்த திரைப்படத்தை முதல்வர் ஸ்டாலினும் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினும் பார்த்ததாக உதயநிதி தெரிவித்துள்ளார்.

லவ் டுடே
இதுகுறித்து அவர் சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் அப்பாவும் அம்மாவும் வந்து என்னென்ன படம் ஓடுது என என்னிடம் கேட்டார்கள். லவ் டுடே ஓடுகிறது என்றேன். அது உன் ரிலீஸா என கேட்டார்கள். ஆமாம் என்றேன், வேறு என்ன படம் இருக்கு என்றார்கள், காபி வித் காதல் இருக்கிறது என்றேன். அதுவும் உன்னோடதுதானா என்றார்கள் ஆம் என்றேன்.

போனை மாத்திக்கலாமா
ஒரு படத்தையும் மிச்சம் வைக்க மாட்டீயா என கேட்டார்கள். பிறகு லவ் டுடே படத்தை பார்த்தார்கள். படம் பார்த்து முடித்தவுடன் நான், கிருத்திகா, தங்கை செந்தாமரை ஆகியோர் இருந்தோம். அப்போது அப்பா , படம் நன்றாக இருக்கிறது என்றார், அம்மா உடனே, உதய் நம்ம எல்லாரும் போனை மாத்திக்கலாமா என கேட்டார். உடனே நானும் அப்பாவும் அய்யய்யோ வேணவே வேணாம்னு சொன்னோம் என சிரித்துக் கொண்டே கூறினார்.

பிரதீப் இவானா
இந்த படத்தில் பிரதீப்பும் இவானாவும் காதலிக்கிறார்கள். இந்த விவகாரம் இவானாவின் தந்தையான சத்யராஜுக்கு தெரிகிறது. உடனே அவர் எந்த எதிர்ப்பையும் ஆதரவையும் தெரிவிக்காமல் ஒரு 24 மணி நேரத்திற்கு இருவரின் போனையும் மாற்றி கொள்ளுங்கள், அதன்பிறகும் காதல் தொடர்ந்தால் பிறகு பேசலாம் என்கிறார்.

போனால் காதல் முறிந்ததா
இருவரும் ஒரு நாளைக்கு மட்டும் போனை மாற்றிக் கொள்கிறார்கள். அதில் இருக்கும் ரகசியங்களை ஒருவருக்கு ஒருவர் தெரிந்து கொள்கிறார்கள். இதனால் இருவருக்குள்ளும் பிரச்சினைகள் வருகின்றன. இதன் பிறகும் இருவரது காதலும் தொடர்கிறதா என்பதுதான் இந்த படத்தின் கதை. 90ஸ் கிட்ஸ் , 2கே கிட்ஸ்கள் இன்று காதலை அணுகும் விதத்தின் ஜெராக்ஸ் போல் அமைந்துள்ளது இந்த படம். படத்தில் காமெடி காட்சிகள் வயிறு குலுங்க வைக்கின்றன. பிரதீப்பின் நடிப்பு அருமை என்கிறார்கள் ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications