தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை.. இதுதான் 'வெற்றி சட்டம் - ஒழுங்கு' நிலை.. சாடிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை: சென்னையில் தவெக நிர்வாகி ஒருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் 'வெற்றி சட்டம்-ஒழுங்கு' நிலை என்று கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், இதற்கும் திமுகவை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை பெசண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அண்மையில் தவெகவில் இணைந்தார். இவர் நேற்றிரவு வண்ணாந்துறை பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2009ல் சிவா என்பவரின் கொலைக்கு காரணமாக கண்ணன் இருந்ததாகவும், அதற்கு பழிக்குபழி வாங்க இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தலைநகரிலேயே தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், நாளை முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.
அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் தவெகவில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் 'வெற்றி சட்டம்-ஒழுங்கு' நிலை! தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?
இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா? இதற்கும் திமுகவை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை விவகாரத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 2009ல் படுகொலையான சிவாவின் சகோதரர் மகன் தலைமையிலான கும்பல், தற்போது கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
