உதயநிதி ஸ்டாலினால் விஜய்யிடம் ஸ்கோர் பண்ண முடியல.. 2 தொகுதிகளிலும் திமுக தோற்கும்: மணி ஆரூடம்
சென்னை: "சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதியால் ஸ்கோர் செய்ய முடியவில்லை, ஆனால் விஜய் ஸ்கோர் செய்துவிட்டார். அந்த ஏமாற்றத்திலும் கோபத்திலும்தான் திமுகவினர் சட்டமன்றத்தைப் பற்றி தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் மணி விமர்சனம் செய்துள்ளார்.
Prime9 Tamil சேனலுக்கு பேட்டி தந்துள்ள மணி, "வரப்போகும் இடைத்தேர்தல் குதிரை பேரத்தினால் திணிக்கப்பட்ட ஒன்று... திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சியைப் பிடிக்க முயற்சித்ததாகப் பேச்சுகள் இருந்த நிலையில், ஒரு எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இதை விமர்சிப்பது நியாயமானதே.

கருணாநிதி செய்ததை செய்யும் விஜய்
ஆனால், 2006-2011 சிறுபான்மை திமுக ஆட்சியின் போது, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து, 2009-ல் அவர்களை திமுக சார்பில் போட்டியிட வைத்து ஜெயிக்க வைத்தார் கருணாநிதி. அன்றைக்குக் கருணாநிதி செய்ததை தான் இன்று விஜய்யும் செய்கிறார். அன்று கருணாநிதி செய்தபோது அதைத் தவறு என்று சொல்லாத ஸ்டாலின், இன்று விஜய் செய்யும்போது மட்டும் அதை குதிரை பேரம் என்று விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம்?
சட்டமன்ற நேரலை ஒளிபரப்பில் அனுபவம் வாய்ந்த திமுக, தவெக எம்.எல்.ஏ-க்களிடம் தோற்றுப் போய்விட்டது. நேரலையை எப்படியாவது பலரும் தடுக்க பார்த்தார்கள்.. ஆனால் அது முடியவில்லை.. இந்த நேரலையை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியாத கோபத்திலும் வைத்தெரிச்சலிலும்தான் சட்டமன்ற நிகழ்வுகளை இழிவுபடுத்திப் பேசுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் டம்மி செய்து பேசுகிறார்..
ஜேசிடி பிரபாகரன்
உண்மையில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் சபையை சிறப்பாகவும் ஜனநாயகப் பண்போடும் நடத்துகிறார் என்பது மனசாட்சி உள்ள ஒவ்வொரு திமுகவினருக்கும் தெரியும். ஆளும்கட்சியை விட எதிர்க்கட்சிகளுக்குத் தான் அவர் கூடுதல் அவகாசம் வழங்கிப் பேச அனுமதித்தார். சபாநாயகர் ஆக்ஷன் சொன்னதும் விஜய் நடிக்கிறார் என்று உதயநிதி பேசுவது உண்மையற்ற பேச்சு. விஜய் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாலேயே உதயநிதி அப்படிப் பேசுகிறார்.
நேரலை மட்டும் இல்லையென்றால் மீடியாக்கள், திமுக சொல்வதைத்தான் செய்தியாக வெளியிடும். ஆனால் நேரலையில் எதிர்க்கட்சிகளுக்குப் பேச வாய்ப்பளிக்கப்படுவதும், 22 நிமிடங்கள் சபையில் அமளி நடந்ததும் மக்களுக்கே நேரடியாக தெரிகிறது. மக்களிடம் தங்கள் பருப்பு வேகவில்லை என்பதால், சட்டமன்ற நேரலை ஒளிபரப்பை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று திமுக துடியாய் துடிக்கிறது.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதியால் ஸ்கோர் செய்ய முடியவில்லை; ஆனால் விஜய் ஸ்கோர் செய்துவிட்டார். அந்த ஏமாற்றத்திலும் கோபத்திலும்தான் திமுகவினர் சட்டமன்றத்தைப் பற்றி தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள்.
ஸ்கோர் செய்த விஜய்
ஜெயலலிதா, கருணாநிதி அல்லது ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தில் இதேபோல புகழ்பாடும் நிகழ்வுகளும், வேளாண் பட்ஜெட்டை கருணாநிதி சமாதியில் வைத்து எடுத்து வந்த நிகழ்வுகளும் நடந்தன. மக்கள் நினைவாற்றல் குறைவு என்பதால் ஊடகங்கள் இப்போது இதை மட்டும் கேள்வி கேட்கின்றன.
முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைமை மற்றும் துரைமுருகன் போன்றோர் "யார் காலிலாவது விழுந்தாவது இந்த இடைத்தேர்தலில் வெற்றியைத் தாரை வார்க்காமல் கொண்டுவந்து தாருங்கள்" என்று பேசுவது, தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற அவர்களின் தவிப்பைக் காட்டுகிறது.
இடைத்தேர்தலில் திமுக தோற்கும்
ஆனால், இந்த 2 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற அறவே வாய்ப்பில்லை. இதில் ஒன்று தவெக ஜெயிக்கும் அல்லது அதிமுக ஜெயிக்கும். இது ஸ்டாலின், உதயநிதி மற்றும் துரைமுருகன் உட்பட திமுக தலைமைக்கே நன்றாகத் தெரியும்.
திமுகவிற்கு எந்தவொரு பெரிய கட்சியோ கூட்டணியோ ஆதரவாக இல்லை.. முற்றிலும் தனித்தே களம் காண்கிறார்கள். தொண்டர்கள் சோர்ந்து போய்விடக் கூடாது என்பதற்காகவே தலைவர்கள் மேடைகளில் இப்படித் தீவிரமாக பேசுகிறார்கள். திமுக தொடர்ந்து விஜய் மீது தனிமனித தாக்குதல்களில் ஈடுபட்டால், அது மக்கள் மத்தியில் விஜய்க்கும் தவெகவுக்கும்தான் மேலும் அனுதாபத்தையும் பலத்தையும் சேர்க்கும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
