தை பிறந்ததுமே வழி.. புரமோஷனாமே.. பதவியை இழக்கும் அந்த அமைச்சர் யார்? பரபரக்கும் தமிழக அரசியல்
முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை தருவார் என்கிறார்கள்
சென்னை: தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப, திமுக அமைச்சரவையில் மிக முக்கிய மாற்றங்கள், திருப்பங்கள் நடக்க உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. இதையடுத்து அறிவாலயம் மீது பலரது கவனங்கள் குவிந்து வருகின்றன..!
திமுக ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த சில நாட்களில் இருந்தே, அமைச்சரவை மாற்றம் என்ற செய்தி கசிந்து வெளிவந்தது.. அதாவது, அமைச்சர்களில் சிலர் மாற்றப்பட உள்ளதாகவும், அதனால் சீனியர்கள் பலர் அப்செட்டில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இதற்கு 2 விதமான காரணங்கள் அப்போது சொல்லப்பட்டன.. ஒன்று, சீனியர்களுக்கு இலாகாவை குறைத்து தந்ததால் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் தங்கள் பணிகளை சரியாக செய்வதில்லை.. மற்றொன்று சீனியர் அமைச்சர்களே பொதுவெளியில் சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டி கொண்டதாலும், அமைச்சரவை மாற்றப்படலாம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

நல்லதல்ல
ஆனால், அப்படி எந்த மாற்றமும் நடக்கவில்லை.. ஏனென்றால், மிகக்குறுகிய காலத்தில் அமைச்சர்களை மாற்றுவது கட்சிக்கு நல்லதல்ல என்பது மட்டுமல்ல, அமைச்சர்கள் நியமனத்தில் தான் எடுத்த முடிவு தவறானதாகிவிடும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அந்த விஷயத்தில் முதல்வர் தெளிவாக இருப்பதாகவும், வேண்டுமானால் சில அமைச்சர்கள் வைத்திருக்கும் முக்கிய இலாக்காக்களை மாற்றக்கூடும் என்றும் கூறப்பட்டது.

முக்கிய தகவல்
ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.. பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடர், பட்ஜெட் என அடுத்தடுத்து தமிழக அரசும் பிஸியாகிவிட்டது.. இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் என்ற தகவல் கசிந்து வருகிறது.. இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசும்போது அவர்கள் சொன்னதாவது:

அமைச்சரவை
"இப்போதைக்கு திமுகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பதாலும், அமைச்சர்கள் மீது பெரிதாக எந்தவிதமான புகாரும் எழவில்லை என்பதாலும், அவரவர் துறையில் அவரவர் சிறப்பாகவே செயல்பட்டு வருவதாலும் அமைச்சரவையில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.. ஆனால், சில அதிரடிகளை முதல்வர் கையில் எடுக்க வாய்ப்பிருக்கிறது.

செயலாளர்கள்
சம்பந்தப்பட்ட துறையில் அனுபவமும், தெளிவுமில்லாத அமைச்சர்களுக்கு, நன்கு திறன்வாய்ந்த அதிகாரிகளை செயலாளர்களாக நியமிக்க முதல்வர் முடிவு செய்யலாம் அல்லது அனுபவம் வாய்ந்த சீனியர் அமைச்சர்களுக்கு, கொஞ்சம் புதிய அதிகாரிகளை செயலாளர்களாக நியமிக்கலாம்.. அதேபோல, உதயநிதி ஸ்டாலினுக்கு மிக முக்கியமான பொறுப்பையும் வழங்கவிருக்கலாம்..

புதிய பொறுப்புகள்
ஆரம்பத்தில் தொகுதியில் ஆக்டிவ்வாக இருந்த உதயநிதி, கடந்த சில மாதங்களாகவே தொகுதி பக்கம் வருவதில்லை.. இதற்கு காரணம், கையில் உள்ள படங்களை முடித்து தந்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிகிறது.. இந்த சமயத்தில்தான், திமுகவில் சில அமைச்சர்களே, உதயநிதிக்கு அமைச்சர் பதவியை தரலாம் என்று சொல்லவும் ஆரம்பித்துள்ளனர்.. அமைச்சர் பதவி வேண்டாம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியே தர வேண்டும் என்று கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தரப்பு, முதல்வருக்கு கோரிக்கை வைத்து மனு அனுப்பும் அளவுக்கு சென்றுவிட்டது.

உதயநிதி
எனவே, உதயநிதிக்கு ஏதாவது ஒரு முக்கிய பொறுப்பு விரைவில் வரக்கூடும். "அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பின்மீதும் எனக்கு ஆசை இல்லை. மக்கள் பணியில் என்றும் உங்களுள் ஒருவராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். முதல்வர் ஸ்டாலினுக்கும், மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்று உதயநிதி சொன்னாலும்கூட, அமைச்சராகவோ, துணை முதல்வராகவோ, கட்சியின் தலைமைக்கோ உதயநிதி வரத்தான் செய்வார். மறுபடியும் திமுக வாரிசுக் கட்சி என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் கண்டிப்பாக முன்வைக்கத்தான் செய்வார்கள்.. அதை கடந்த காலங்களை போலவே இப்போதும் திமுக எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

சிக்கல்
இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது.. அரசியலமைப்பு 91வது திருத்தச்சட்டம் 2003-ன் படி, மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் குழுவில் முதல்வர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை, அதாவது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்... இந்த சட்டத்திருத்தத்தின்படி, முதல்வர் உட்பட 34 அமைச்சர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

33 அமைச்சர்கள்
இப்போதைக்கு அமைச்சரவையில் முதல்வர் மற்றும் அவருடன் 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள்.. அதனால், உதயநிதி அமைச்சரானால், ஏற்கெனவே பதவியில் இருக்கும் அமைச்சர்களில் ஒருவருக்கு சிக்கல் ஏற்படக்கூடும்.. அந்த ஒருவர் யாராக இருக்கும் என்று தெரியவில்லை.. அதேசமயம், திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதிதான் முக்கியம் என்று கருதும் அமைச்சர்கள் தங்கள் அமைச்சர் பதவிகளையும் தக்க வைத்து கொள்வதிலும் உறுதியாகவே இருப்பார்கள்.. உதயநிதிக்கு அமைச்சர் பதவியா? அல்லது துணை முதல்வர் பதவியா? என்பது பொங்கல் முடிந்து தெரிந்துவிடும்" என்றனர்.


Click it and Unblock the Notifications
