நினைச்சது பலிக்க போகுது.. உதயநிதிக்கு வரப்போகிறது பொறுப்பு.. தீர்மானம் போட்டது திருச்சி!
உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் பொறுப்பு வழங்க யோசிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
சென்னை: உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. இதற்கு திருச்சி மாவட்ட திமுக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்துள்ளது!
திமுகவைப் பொறுத்தவரை இளைஞர் அணிக்கு என தனி பெருமையும், முக்கியத்துவமும் உண்டு. இளைஞர் அணியின் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் மு.க.ஸ்டாலின். திமுகவில் கருணாநிதிக்கு அடுத்து அதிக கவனம் பெற்றதும் இந்த இளைஞர் அணிதான். இந்த அணியின் பொறுப்பில் இருந்தபடிதான் தன்னைப் பட்டை தீட்டிக் கொண்டார் ஸ்டாலின்.
அத்தகைய சிறப்பு பெற்ற இளைஞர் அணியின் தலைவர் பதவியில் தற்போது வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளார். இவர் முன்னாள் அமைச்சரும் கூட! ஆனால் அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று முணுமுணுப்பு உள்ளது. அது தீவிரமடைந்துள்ளது. அந்தப் பொறுப்பை உதயநிதி ஸ்டாலினுக்குத் தர வேண்டும் என்று உதயநிதியின் ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகின்றனராம்.

உதயநிதி
இந்நிலையில்தான் பிரச்சாரத்தில் களை கட்டினார் உதயநிதி. குறிப்பாக இளசுகளை கவர்ந்து இழுத்தார். நடிகர் என்ற முறையிலும், கலைஞரின் பேரன் என்ற முறையிலும் உதயநிதியை பார்க்க ஒரு கூட்டம் பிரச்சாரத்திற்கு திரண்டு கொண்டே இருந்தது. புன்னகை மாறாத எளிய பேச்சுக்களால் மக்களை கவர்ந்தார் உதயநிதி. கட்சியின் மூத்த தலைவர்களுக்காக பிரச்சாரம் செய்யும் அளவுக்கும் தன்னை உயர்த்தி கொண்டார்.

வெற்றி
திமுகவின் வெற்றிக்காக உழைத்ததில் உதயநிதிக்கும் பங்கு உள்ளது என்பதால், அவருக்கு கட்சியில் ஒரு பொறுப்பை வழங்க வேண்டும் என்றும் கட்சி தலைமைக்கு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ராஜினாமா?
இந்த விஷயங்கள் எல்லாம் சாமிநாதனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது இளைஞர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், தனது ராஜினாமா கடிதத்தையும் விரைவில் கொடுக்க போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அறிவிக்க வாய்ப்பு
மற்றொரு பக்கம், இளைஞர் அணி செயலாளராக உதயநிதியை பொறுப்பேற்க திமுக தலைமை அதற்காக வேலைகளை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை சாமிநாதனின் ராஜினாமா ஏற்கப்படுமானால், ஒரு சில தினங்களிலேயே உதயநிதிக்கு பொறுப்பு அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

திருச்சியில் தீர்மானம்
இந்த தகவல்களை எல்லாம் உறுதிபடுத்தும் விதமாக, திருச்சியில் திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தொடர்ந்து தனது வெற்றிபயணத்தை தொடர்வதற்காகவும், திமுக இளைஞர் அணியை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் அணி செயலாளர் பதவியை உதயநிதி அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுகவினர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் பதவி
இந்த தீர்மானம் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். இதுபோலவே மற்ற மாவட்டங்களிலிருந்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தலைமைக்கு அனுப்பப்படலாம். ஆக மொத்தம், உதயநிதிக்கு இளைஞர் அணி பொறுப்பு ரொம்ப பக்கத்திலேயே உள்ளது!












Click it and Unblock the Notifications