ஸ்டாலினின் தனி செயலர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு.. முதல்வரின் பயணங்களை தீர்மானிக்கப்போவது இவர்தான்!
சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதல் தனி செயலராக உமாநாத் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் இரண்டாவது தனி செயலாளராக எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ், மூன்றாவது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் புதிய தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். தமிழக அரசின் தலைமைச் செயலராக பொறுப்பு வகித்த சிவ்தாஸ் மீனா விருப்ப ஓய்வில் செல்ல இருப்பதாலும், அவர் ரியல் எஸ்டேட் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பதாலும் தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நேற்று நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, முதலமைச்சரின் புதிய தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வர் ஸ்டாலினின் முதன்மை தனிச்செயலாளராக இருப்பார். இவருக்கு அடுத்தபடியாக 2வது முதன்மைச் செயலாளராக சண்முகம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் மூன்றாவது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளர் முருகானந்தம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சரின் தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் முதன்மைச் செயலாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ள உமாநாத் ஐஏஎஸ்-க்கு நிதி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு, எரிசக்தி, உள்துறை, தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, நீர்வளத்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள், நகராட்சி நிர்வாகம், இயற்கை வளம், பொதுப்பணித்துறை, விஜிலென்ஸ் கமிஷன், ஆகிய 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் இரண்டாவது தனிச் செயலாளர் எம்.எஸ். சண்முகத்திற்கு வேளாண்மை, உணவு, முதல்வரின் அலுவலக நிர்வாகத்துறை, உயர்க்கல்வி, வீட்டுவசதி, சட்டத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை ஆகிய 12 துறைகள் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது.
முதல்வரின் மூன்றாவது தனிச் செயலாளர் அனு ஜார்ஜ்க்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், கால்நடைத்துறை, பால் மற்றும் மீன் வளம், சிறுபான்மை நலம் மற்றும் முதல்வர் அலுவல் பயணம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனத்துறை, மக்கள் நல்வாழ்வு துறை, சிறு, குறு தொழில்துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாடு, மாற்றுத்திறனாளி நலன், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.லட்சுமிபதிக்கு கைத்தறி, துணிநூல் மற்றும் காதி, தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம், சமூக பாதுகாப்பு, திட்டம் மற்றும் வளர்ச்சி, போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத்துறை ஆகிய 9 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications