பகலில் பல்லவன், வைகை ரயில்களில் வாழ்நாளில் நினைக்க முடியாத கூட்டம்... இரவில் கிளாம்பாக்கம் வேறலெவல்
சென்னை: நாளை நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் ஆர்வமுடன் சொந்த ஊருக்கு படை எடுத்து வருகிறார்கள். இதனால் சென்னை, கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ஸ்தம்பதித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற போகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதியும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் இருக்கிறது. இங்கு வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாதமாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டன.. பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நாளை தேர்தல் நடைபெற போகிறது. தேர்தலில் வாக்களிக்க மக்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறுவதால், அடுத்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இதன் காரணமாக சென்னையில் வழக்கத்தைவிட போக்குவரத்து அதிகமாக உள்ளது. ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, நேரு சாலை, பூந்தமல்லி சாலை, ரெட் ஹில்ஸ் சாலை, ஆவடி சாலையில் போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு வரை நெரிசல் அதிகமாக இருந்தது.
சென்னையில் பல்லவன்,வைகை,நெல்லை, தூத்துக்குடி, பாண்டியன், பொதிகை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் கூட்டம் அலை மோதியது. இன்று பிற்பகலில் புறப்பட்ட பல்லவன், வைகை ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டிகளில் முழுக்க முழுக்க முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறினார்கள். மக்கள் கூட்டம் அலை மோதிய காரணத்தால், தாம்பரம், செங்கல்பட்டில் ரயிலில் செல்ல முன்பதிவு செய்தவர்கள் ரயிலிலேயே ஏற முடியாத அளவிற்கு சிக்கலை எதிர்கொண்டார்கள்.. அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இப்படி என்றால், தொழில் நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி போன்ற நகரங்களில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அலைமோதியது. எல்லாருமே சொந்த ஊர் செல்வதால், திருப்பூர், கோவையில் அடுத்த 3 நாட்கள் வணிக நிறுவனங்கள் பல அடைக்கப்படுகின்றன.
திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் பல அடுத்த 3 நாட்கள் இயங்காது என்றே கூறப்படுகிறது . சிறப்பு பேருந்துகளில் ஏறி சொந்த ஊர் செல்ல குடும்பத்துடன் பேருந்து நிலையங்களில் மக்கள் குவிந்தனர். மக்கள் நெரிசல் இல்லாமல் ஏறி செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே பதற்றம் இல்லாமல் கிளம்பி செல்ல முடியும். பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசார் பேருந்து நிலையங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்..
இதனிடையே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ், தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் உள்ள பொதுத் துறை, தொழில்,வர்த்தகம், உணவு, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் போக்குவரத்து, பீடி, சுருட்டு மற்றும் தோட்ட நிறுவனங்கள், அனைத்து கடைகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நாளை (ஏப்.19-ம்தேதி) ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications