விந்தையிலும் விந்தை... 9 நாட்களும் 9 கலர்களில் ஆடை அணிய வேண்டும்... யூனியன் வங்கியின் ஆர்டர்..!
சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு ஊழியர்கள் அனைவரும் 9 நாட்களுக்கும் 9 வண்ணங்களில் ஆடை அணிந்து வர வேண்டும் என விந்தையான உத்தரவு போட்டு, பிறகு எழுந்த கடும் எதிர்ப்புகளால் அதை திரும்பப்பெற்றிருக்கிறது யூனியன் வங்கி.
தனிமனித உரிமைகளை பறிக்கும் வகையில் யூனியன் வங்கி நிர்வாகம் வெளியிட்ட இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இதில் கொடுமை என்னவென்றால், தாங்கள் உத்தரவு போட்டப்படி ஆடை அணிந்து வராத வங்கி ஊழியர்கள் ரூ.200 அபராதம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது தான்.

யூனியன் வங்கி
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் யூனியன் வங்கியும் ஒன்று. லட்சக்கணக்கான ஊழியர்களை கொண்டு செயல்படும் இந்த வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கை தான் கடும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. நவராத்தி விழா தொடங்கிய அக்டோபர் 7-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை தினமும் ஒரு கலரில் ஆடை அணிந்து ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் எனக் கூறியிருந்தது.

கலர் கலராக
அதன்படி அக்டோபர் 7-ம் தேதி வியாழக்கிழமை மஞ்சள் நிறை ஆடையும், அக்.8-ம் தேதி வெள்ளிக்கிழமை பச்சை நிற ஆடையும், அக்.9-ம் தேதி சனிக்கிழமை கிரே நிற ஆடையும், அக்.10-ம் தேதி ஆரஞ்ச் நிற ஆடையும், அக்.11-ம் தேதி திங்கட்கிழமை வெள்ளை நிற ஆடையும், அக்.12-ம் தேதி செவ்வாய்கிழமை சிவப்பு நிற ஆடையும், அக்.13-ம் தேதி புதன்கிழமை ராயல் நீல நிற ஆடையும், அக்.14-ம் தேதி பிங்க் நிற ஆடையும், அக்.15-ம் தேதி பர்ப்பிள் நிற ஆடையும் அணிந்து பணிக்கு வரவேண்டும் அலுவல் பணியாளர்கள், டிஜிட்டல் துறை பணியாளர்கள் என அனைவருக்கும் ஆர்டர் போடப்பட்டது.

ரூ.200 அபராதம்
இதனிடையே நவராத்திரி விழா கொண்டாடப்படும் 9 நாட்களும் நாள்தோறும் குழு புகைப்படம் எடுக்கப்படும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்கூறிய நிறங்களில் ஆடை அணிந்து வராதவர்கள் ரூ.200 அபராதம் விதிக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது தான் ஊழியர்களை கொந்தளிக்க வைத்துவிட்டது.

சுற்றறிக்கை
எல்லோரிடமும் மேற்கூறிய எல்லா நிறங்களிலும் ஆடை இருக்குமா என்பது கேள்விக்குறியாகும். தனி மனித உரிமைகளை பறிக்கும் வகையில் இந்த அறிவுறுத்தல் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் இப்போது இந்த சுற்றறிக்கை திரும்பபெற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications