மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்பு என்ன? மண்டல வாரியாக விவரம் இதோ
சென்னை: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 'தமிழ்நாடு' என்ற வார்த்தையே இடம் பெறாமல் போனது கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப் போகும் பட்ஜெட்டிலாவது தமிழ்நாட்டின் திட்டங்கள், தமிழ்நாட்டில் தொழில்துறையினரின் கோரிக்கைகள் நிறைவேறுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழ்நாட்டின் சில முக்கியமான கோரிக்கைகளும் தொழில்துறை எதிர்பார்ப்புகளும்:
மதுரை
- மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ரூ11,500 கோடியில் 20% நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
- 2011-ல் அறிவிக்கப்பட்ட 116 ஏக்கரிலான நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் எஜூகேஷன் அண்ட் சயின்ஸ் (NIPHER) கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்க வேண்டும் .
- மதுரை, சேலம், கோவை ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்
- மதுரைக்கு அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புறநகரில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.
- மதுரையை சுற்றி தற்போது 3 தொழிற்பேட்ட்டைகள் மட்டும் உள்ளன. கூடுதல் தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும்.
- சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக வங்கிகள் மூலம் சோலார் பேனல் அமைக்க 25% மானியம் ஒதுக்க வேண்டும்
மேற்கு மாவட்டங்கள்- கோவை, திருப்பூர், ஈரோடு
- கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5% வட்டியுடன் வங்கிக் கடன் வழங்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
- கோவை சுற்று வட்டாரங்களில் குறுந் தொழில்களுக்கு தனி தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும்
- பிராண்ட் உற்பத்தியாளர்கள் மற்றும் குறுந்தொழில் செய்வோருக்கு ஒரே ஜிஎஸ்டி வரி என்பதை மாற்றி குறுந்தொழில் செய்வோருக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்; சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி என்பது 12% அளவுக்குள்தான் இருக்க வேண்டும். ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி மட்டும் விதிக்க வேண்டும்.
- சிறு குறு தொழில்களுக்கு வட்டியை சமன்படுத்தும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்
- ஆண்டுக்கு ரூ70,000 கோடி வருவாய் ஈட்டித் தரும் திருப்பூர் பின்னலாடை துறைக்கு சிறப்பு நிதிக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
- செயற்கை இழையில் உற்பத்தியாகும் ஆடைகளின் ஏற்றுமதி இறக்குமதிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.
- வங்கதேசத்தில் இருந்து துணிவகைகள் இறக்குமதி செய்யப்படுவதை நெறிமுறைப்படுத்த வேண்டும்
- AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு வங்கி கடன் உதவி, மானியம் வழங்க வேண்டும்
- வங்கதேச ஆர்டர்கள் திருப்பூருக்கு வருவதால் ஜவுளித்துறைக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும்; அதற்கேற்ப புதிய திட்டங்கள், எளிதான வங்கி கடன்- குறைவான வட்டியில் கடன் உதவிகளை அறிவிக்க வேண்டும்.
- ஜவுளித்துறைக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்; தொழிலாளர்களுக்கு வீடுகள், விடுதிகள் அமைக்க மானியம் வழங்க வேண்டும்
- செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியை பிஎல்ஐ1 திட்டத்தில் இணைத்து போல பருத்தி நூலிழை ஆடை உற்பத்தி தொழிலையும் அதில் இணைக்க வேண்டும்.
- ஈரோடு, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிகளைப் பாதுகாக்கும் வகையிலான ரக ஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். விசைத்தறிக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ; விசைத்தறிகளை மேம்படுத்த 50% மானியம் வழங்க வகை செய்யும் Powertex இந்தியா திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்
- மஞ்சள், அரிசி, வாழை உற்பத்தி அதிகமாக இருக்கும் ஈரோட்டில் ஏற்றுமதிக்கு உதவும் வகையில் குளிர்சாதன கிடங்குகளை அமைக்கும் வகையில் தனியாருக்கு மானியம் வழங்கும் வகையிலான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
தமிழகத்தின் பொது கோரிக்கைகள்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் மத்திய அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பங்கேற்றிருந்தார். இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், சென்னை மெட்ரோ இரயில் 2-ம் கட்ட பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசு ரூ.26,490 கோடி ரூபாய் செலவிட்டுள்ள காரணத்தால், மாநிலத்தில் இதர வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டில் ரூ. 10,000 கோடி மற்றும் அடுத்த ஆண்டு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தினேன்.
ஆசிரியர்களுக்கான ஊதியம் - கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பள்ளிச் செயல்பாடுகளை முடக்கும் வகையில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்காமல் நிபந்தனைகளை ஏற்க வற்புறுத்தி வரும் மத்திய அரசு, 44 இலட்சம் மாணவர்கள் - 2.2 இலட்சம் ஆசிரியர்கள் - 21,276 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினேன்.
மத்திய அரசின் 2025 நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிய ரயில் திட்டங்களுக்கான அனுமதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.
வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவற்றின் தீவிரத்தன்மை காரணமாக தமிழ்நாடு தொடர் பேரிடர் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், மக்களின் உயிர் - வாழ்வாதாரம் - உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் உண்டாகி வருகிறது. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லை. குறிப்பாக, ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6.675 கோடியை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தினேன் என்றார்.
முதல்வர் ஸ்டாலின் முன்வைத்திருந்த கோரிக்கைகள்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்ன என்ன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற பட்டியலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அந்தத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.
- தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே உயர்மட்ட விரைவுச்சாலை அமைத்தல்
- கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பிரதமரின் வீட்டுத் திட்டங்களில் செலவு வரம்பை அதிகரிக்க வேண்டும்
- தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications