பலரும் அறியாத ஸ்டாலின் - விஜயகாந்த் நட்பு..“நண்பன்” என்ற வார்த்தை தவறாத முதலமைச்சர்! முஸ்தபா முஸ்தபா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் வெவ்வேறு கட்சிகள், எதிரும் புதிருமாக தெரிந்தாலும் பல ஆண்டுகளாக முதலமைச்சர் முக ஸ்டாலின், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தும் நல்ல நண்பர்களாக இருந்து உள்ளனர்.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கி இருக்கிறது. விஜயகாந்த் தொடர்பான நெகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை பலர் பகிர்ந்து வருகிறார்கள். அதில் அதிகம் பேசப்படாதது முதலமைச்சர் ஸ்டாலின் - விஜயகாந்த் இடையிலான நட்பு. விஜயகாந்த் முன்னணி நடிகராக திகழ்ந்த காலத்தில் இருந்து பல ஆண்டுகளாக இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். விஜயகாந்த் கட்சி தொடங்கி அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் ஸ்டாலின் - விஜயகாந்த் இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தது இல்லை.

Unknown friendship between CM MK Stalin and DMDK leader Vijayakanth

இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். ஸ்டாலினுக்கு 70 வயதாகிறது. விஜயகாந்துக்கு தற்போது 71 வயதாகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது விஜயகாந்த் பற்றி பேசினாலும் நண்பன் என்ற வார்த்தையை தவறவிட மாட்டார். கடந்த ஆண்டு விஜயகாந்தின் 3 விரல்கள் அகற்றப்பட்டது தொடர்பாக ட்விட்டரில் முதலமைச்சர் வெளியிட்ட பதிவில், "எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்." என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் இரங்கல் குறிப்பில், "அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர்.

நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.

தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.

தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த 'மக்கள் ஆணையிட்டால்' என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.

Unknown friendship between CM MK Stalin and DMDK leader Vijayakanth

கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+