கழிவிலிருந்து கேஸ்.. அதே கழிவிலிருந்து உரம்.. ரூ.30 கோடி வரை மத்திய அரசு உதவி.. என்ன திட்டம் இது?
சென்னை: விவசாய நிலங்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களில் சேரும் மாட்டு சாணம், விவசாயக் கழிவுகள், சமையலறை கழிவுகள் மற்றும் சந்தை கழிவுகளை இனி தூக்கிப் போடத் தேவையில்லை... ஏன் தெரியுமா? இவற்றை வைத்து எரிவாயுவும், விவசாயிகளுக்கு பயன்படும் இயற்கை உரமும் தயாரிக்கலாம். இதற்காக ஆலை தொடங்குபவர்களுக்கு புதிய சலுகைகளையும் விதிகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது... அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
2018-ம் ஆண்டு "தூய்மை இந்தியா" திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.23,731 கோடி மதிப்பில் "கோபர்தன்' திட்டம்" தொடங்கப்பட்டது.. நாட்டில் தயாரிக்கப்படும் சிபிஜி (CBG - Compressed Bio-Gas) எனப்படும் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவின் அளவை 10 மடங்கு அதிகரிப்பதும், இந்த தொழிலில் தனியார் நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்வதை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். இந்த புதிய சலுகைகள் நடப்பு நிதியாண்டு முதல் தொடங்கி 2035 - 36 நிதியாண்டு வரை அமலில் இருக்கும்.

அரசு தரும் உதவிகள் என்னென்ன
புதிதாக ஆலை தொடங்குபவர்களுக்கு, ஆலை ஒரு நாளைக்கு எவ்வளவு எரிவாயு தயாரிக்கிறதோ அதைப் பொறுத்து அரசு பண உதவி வழங்கும்.. ஒரு நாளைக்கு தயாரிக்கும் ஒரு டன் எரிவாயுவுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை உதவி கிடைக்கும்.
இந்த உதவி ஆலை அமைப்பதற்கு மட்டுமே கிடையாது.. கிராமங்களிலிருந்து மாட்டு சாணத்தை எடுத்து வரும் டிராக்டர், கழிவுகளை ஆலைக்குள் கொண்டு வந்து கொட்டுவதற்கும் கையாளுவதற்கும் தேவையான கருவிகள் வாங்கவும் இதைப் பயன்படுத்தலாம்.
ஒரு திட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ.30 கோடி வரை அரசு பண உதவி கிடைக்கும்.. புதிதாக தொடங்கப்படும் ஆலைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு டன் உற்பத்தி திறனுக்கு ரூ.1.25 கோடி உதவி வழங்கப்படும். இந்த பணம் ஒரே தடவையாக இல்லாமல், தவணை முறையில் வழங்கப்படும்.
100% விற்பனை உத்தரவாதம்
"கேஸ் தயாரித்தால் அதை யார் வாங்குவார்கள்?" என்ற கவலையும் இனி வேண்டாம்.. ஏனென்றால், தகுதியுள்ள உற்பத்தியாளர்கள், தாங்கள் தயாரிக்கும் எரிவாயுவில் 100 சதவீதம் வரை வாங்குவதற்கான உறுதியான விற்பனை ஒப்பந்தத்தைப் பெற முடியும்.
நகரங்களில் கேஸ் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் இந்த சாண எரிவாயுவை நேரடியாகவே வாங்கி ஆக வேண்டும். ஒருவேளை குறித்த நேரத்துக்குள் அவர்கள் அக்ரிமெண்ட் போடவில்லையானால், அவர்களுக்குத் தரும் கேஸ் அளவைக் குறைப்பது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேபோல், வண்டிகளுக்கு பயன்படுத்தும் சிஎன்ஜி. (CNG) கேஸிலும் இந்த உயிரி எரிவாயுவைக் கட்டாயமாக கலக்க வேண்டும். இந்த வருஷம் 3 சதவீதம், அடுத்த வருஷம் 4 சதவீதம், 2028-29 நிதி ஆண்டுகளில் 5 சதவீதம் வரை கலக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
10 வருட விலையும் முன்கூட்டியே கன்பார்ம்
எரிவாயு தயாரிப்பவர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நிலையான வருமானம் கிடைக்க அரசு முன் கூட்டியே விலையை நிர்ணயித்துள்ளது. ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு ரூ.2,110 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 95 சதவீதம் மீத்தேன் உள்ள எரிவாயுவுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.98 என்ற அடிப்படையில் பணம் கிடைக்கும்.
இந்த விலை அடுத்த 10 ஆண்டுகளுக்கு, அதாவது 2036-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை மாறாமல் அமலில் இருக்கும். அதனால் ஆலை தொடங்குபவர்கள் வருமானம் குறித்து எந்தக் குழப்பமும் இல்லாமல் செயல்பட முடியும்.
கெயில் நிறுவனம் - பொறுப்பும் தயாரிப்பும்
மத்திய அரசுக்குச் சொந்தமான கெயில் (GAIL) நிறுவனம் இந்த எரிவாயுவை வாங்குவதற்கான ஒருங்கிணைப்பாளராக செயல்படும். ஆலை தொடங்குபவர்கள் எளிதாக வங்கிக் கடன் பெறுவதற்கும் அரசு உத்தரவாத உதவி இருக்கும். மேலும் எரிவாயுவை கொண்டு செல்ல தேவையான குழாய் வசதிகளுக்கும் ஆதரவு வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் மாட்டு சாணம் மற்றும் கழிவுகள் பெரிய தொட்டியில் போடப்படும். காற்று இல்லாத பெரிய தொட்டியில் கழிவுகள் இயற்கையாக சிதைவதன் மூலம் தூய்மையான எரிவாயுவும், உயர்தர இயற்கை உரமும் உருவாகும்.
கிடைக்கும் எரிவாயுவை சுத்தப்படுத்தி சிலிண்டர்களில் நிரப்பி வாகனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் விற்கலாம். இயற்கை உரத்தை விவசாயிகளுக்கு நேரடியாக விற்கலாம். ஆகமொத்தம் ஒரே கழிவில் இருந்து 2 வழிகளில் வருமானம் கிடைப்பதே இந்த திட்டத்தின் ஸ்பெஷாலிட்டியாகும்..!!


Click it and Unblock the Notifications
