விஜய் டிவி பிக்பாஸ் செட்டில் விபத்து.. வடமாநில தொழிலாளருக்கு நேர்ந்த கதி.. தொடங்கும் முன்பே சோகம்
சென்னை: விஜய் டிவியில் பிக்பாஸ் 8 சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே ஈவிபி பிலிம் சிட்டி. இங்கு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு என்பது நடத்தப்பட்டு வருகிறது. தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனுக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். தற்போது பிக்பாஸ் 8 வது சீசனுக்கான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தான் பிக்பாஸ் -8 சீசனுக்கான செட்டில் பராமரிப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாயின்கான் என்பவரும் செட் பராமரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் காயமடைந்து துடிதுடித்தார்.
உடனடியாக மற்றவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த பிலிம் சிட்டியில் பணியாளர்கள் இப்படி விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்பும் இங்கு சிலர் பிக்பாஸ் செட் அமைக்கும்போது பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் பலி கூட ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான செட் அமைக்கும் பணியின்போது அரியலூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏசி மெக்கானிக் குணசேகரன் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலியாகி இருந்தார்.
அதற்கு முன்பு பிக் பாஸ் 1 சீசன் படப்பிடிப்பின்போது ஊழியரான மும்பையை சேர்ந்த பிளம்பர் சலீம் முகமது ஷேக் என்பவர் மர்மமான முறையில் பலியானார். இவர் மும்பையைச் சேர்ந்தவர். இவர் வலிப்பு ஏற்பட்டு இறந்தார். தற்போது பிக்பாஸ் 8 சீசனுக்கான செட் பராமரிப்பு பணியின்போது கீழே விழுந்து சாயின்கான் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications