முரசொலி மாறனுக்கு சிலை வைத்தீர்களே! அவர் என்ன தியாகியா? திருச்சி சிவாவுக்கு வஉசி பேத்தி கேள்வி
சென்னை: வட இந்தியாவில் வஉசியின் பெயர்களை ஏன் வைக்கவில்லை என மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய நிலையில் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு திமுக என்ன செய்தது என கேட்டு அவரது பேத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் நடந்த கொண்டாட்டம் தொடர்பாக விவாதம் மாநிலங்களவையில் நடந்தது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த விவாதத்தில் திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில், "வந்தே பாரதம் பாடலின் சிறப்பை போற்றும் வகையில் இந்த அவையில் அனைவரும் பேசினர்.

பேச வேண்டிய மக்கள் பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. ஆனால் வந்தே மாதரம் குறித்த விவாதம் மிக முக்கியமானது என கருதி, நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மத்திய அரசு நடத்தியது. வந்தே மாதரம் குறித்து பேசச் சொன்னால் ஆளுங்கட்சி எம்பிக்கள் நேரு மீது குற்றச்சாட்டை முன் வைத்து பேசுகிறார்கள்.
தமிழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் சாலை வைத்துள்ளோம். காந்தியின் மனைவி கஸ்தூரி பாய் காந்தி பெயரில் மருத்துவமனை வைத்துள்ளோம். நேருவின் மனைவி கமலா நேரு பெயரை பூங்காவுக்கு வைத்துள்ளோம். ஆனால் வட இந்தியாவில் வஉசி பெயரில் சாலை உள்ளதா? பாரதியார் பெயரில் தெருவுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதா?
வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி யாருக்காவது தெரியுமா? ஏன் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்டம் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்?
வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டு முதன்முதலில் போராடியவர் மாவீரன் பூலித்தேன். பின்னர் கட்டபொம்மன். இவர்களை வடஇந்தியாவில் உள்ளவர்களுக்கு தெரியுமா? வீரமங்கை வேலுநாச்சியாரை தெரியுமா? விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன. பிரதமர் பேசும் போது வ.உ.சி.யை குறிப்பிட்டுப் பேசுகிறார். ஆனால் அவருக்காக என்ன செய்திருக்கிறீர்கள்?
வெள்ளையர்களை வணிகத்தில் தோற்கடிக்க வ.உ.சி. சுதேசி கப்பலை வாங்கி அதனை வந்தே பாரதம் என அழைத்தார். அவருக்கு வெள்ளை அரசு இரு ஆயுள் தண்டனை விதித்து சிறையில் செக்கிழுக்க வைத்தது. இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சி சிவா பேசிய போது மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசிய போது சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சி சிவாவுக்கு வஉசி பேத்தி மரகதம் மீனாட்சி வீடியோ வெளியிட்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர்,"திருச்சி சிவா, வஉசி பெயர் வட இந்தியாவில் சூட்டப்படவில்லை என வருந்தினார். பாவம் ரொம்பவே வருத்தப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகங்களுக்கு வஉசி பெயரை வைத்திருக்கிறார்? எத்தனை நூலகங்களுக்கு வஉசி பெயர் சூட்டப்பட்டுள்ளது?
நாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைக்க வாய்ப்பு கிடைத்த போதும் வஉசிக்கு சிலை வைக்கவில்லை.
ஆனால் முரசொலி மாறனுக்கு சிலை வைத்தார்கள். முரசொலி மாறன் தியாகம் செய்து சிறை சென்று சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாரா?
சுதந்திரத்திற்காக போராடியவர்களின் பெயர்கள் தெரியாமல் போனதற்கு காந்தி, நேருவின் கூட்டுச்சதியும் காரணம். சுதந்திரத்தையே அவர்கள் இருவரும்தான் வாங்கிக் கொடுத்தது போல எலஸ்லா இடங்களிலும் அவர்களின் பெயரே இருக்கின்றன.
தென் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் வஉசி பெயர் வைக்கவில்லை என்பது தவறு. காந்திக்கு ஜால்ரா தட்டாததே உண்மையான காரணம். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுகவினர், வஉசிக்கு எவ்வளவோ செய்திருக்கலாம்.
வஉசி எழுதிய "மெய்யறத்தை" பாடமாக வைக்க வேண்டுமென 10 ஆண்டுகளாக கேட்கிறேன். அது ஒரே வரி ஆத்திச்சூடி போன்றது, அவர்கள் ஏறெடுத்தாவது பார்த்தார்களா? வ.உ.சிதம்பரம் பிள்ளை என்ற பெயரை வ.உ.சிதம்பரனார் என சுருக்கியதில் மட்டும்தான் இவர்களது கவனம் இருந்தது.
பிரதமர் மோடி வந்தே மாதரம் குறித்து பேசிய போது வஉசி கப்பல் ஓட்டினார் என பெருமையாக பேசினார். இதை விட வேறு என்ன பெருமை வேண்டும். வஉசி உள்ளிட்ட தலைவர்களை முடக்குவதிலேயே திமுக- காங்கிரஸ் மிகவும் அக்கறையோடு செயல்பட்டனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மரகதம் தனது வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications