நிர்வாணம்.. உணவில் எச்சில் துப்பிய கொடூரம்.. வாச்சாத்தி வன்கொடுமையை விவரிக்கும் வழக்கறிஞர்
சென்னை: வாச்சாத்தி மலை கிராம மக்களுக்கு நடந்த கொடுமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் இளங்கோ கூறியுள்ளார். வனத்துறை அலுவலகத்தில் கிராம மக்களை நிர்வாணப்படுத்தியும் உணவில் எச்சில் துப்பியும் உண்ணக்கொடுத்தனர் என்று வேதனையோடு கூறியுள்ளார் வழக்கறிஞர் இளங்கோ.
தர்மபுரி மாவட்டம், ஆரூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள கல்வராயன் மலை தொடரின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலை கிராமம். இந்த கிராமத்தில், 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி சந்தனமரம் வெட்டி, கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாக கூறி 155வனத்துறையினர், 108காவல்துறையினர், 6வருவாய் துறையினர் என 269பேர் உள்ளடங்கிய குழுவினர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக 90பெண்கள் உள்ளிட்ட 133பேர் கைது செய்யப்பட்டும், கிராம மக்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது, 18மலை வாழ் பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஆரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சி.பி.ஐ யிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் 1993ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 1995ஆம் ஆண்டு சி.பி.ஐ க்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்பின் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது, அதில் வனத்துறையை சேர்ந்த 155பேர்,காவல்துறையை சேர்ந்த 108பேர், வருவாய்த்துறையினர் 6பேர் என 269பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
பின்னர், இந்த வழக்கு கோவை, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு 2008ல் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் கடந்த 2011ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில் குற்றஞ்சாட்டப்பட்ட 269பேரில்,தீர்ப்பு வழங்கிய நாளன்று உயிருடன் இருந்த 215பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. 12பேருக்கு 10ஆண்டுகள் சிறையும், 5பேருக்கு 7ஆண்டுகள் சிறையும், மற்றவர்களுக்கு 1-3ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், சம்பவத்தில் தொடர்புடைய பகுதியாக கருதப்படும் வாச்சாத்தி கிராமத்திற்கு நேரிடையாக சென்று மக்களை சந்தித்து வழக்கு தொடர்பாக கேட்டறிந்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதன்படி, வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தருமபுரி மாவட்ட நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக 10 லட்சம் இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்க்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
5 லட்ச ரூபாயை குற்றம் புரிந்தவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பின்னர், அப்போதைய எஸ்.பி., மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தீர்ப்பு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வாச்சாத்தி மலைகிராம மக்களின் தரப்பு வழக்கறிஞர், பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த சம்பவமே வெளியில் வந்தது. 19 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. சரியாக அதே தேதியில் இந்த வழக்கில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போதய வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன், இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று மறுத்தார்.

வாச்சாத்தி கிராமம் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே கூறினார் செங்கோட்டையன். எம்எல்ஏ டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நீதி கேட்டு போராடினர். ரேசன் கடைகளை அடித்து நொறுக்கியது, கால்நடைகளை கொன்றனர், கோழிகளை கொன்று சமைத்து சாப்பிட்டனர். ரேசன்கடைகளில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து நெல்லில் கொட்டினர் என இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்த ஐஏஎஸ் அதிகாரிகளின் அறிக்கையில் உள்ளது.
இத்தனை கொடுமைகளை செய்த அதிகாரிகள் கிராம மக்கள் மீதுதான் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தனர். இன்று வரை அரசு அதிகாரிகள் மீது வழக்கு போடப்படவில்லை என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார். பாவப்பட்ட மக்கள் இவர்கள். வீடுகளை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டனர். உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்தனர். வெளியில் சொல்ல முடியாத பல கொடுமைகள் வனத்துறை அலுவலகத்தில் நடந்தது.
அனைவரையும் நிர்வாணப்படுத்தி நிற்க வைத்து கொடுமை செய்தனர்.
விளக்கமாற்றை கையில் கொடுத்து ஊர் தலைவரை அடிக்க வைத்தனர். வனத்துறையினர் சாப்பிட்ட உணவுகளின் மிச்சத்தில் தண்ணீர் ஊற்றி எச்சில் துப்பிதான் சாப்பிட கொடுத்தனர் என்றும் வழக்கறிஞர் இளங்கோ தெரிவித்தார். குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் செய்தனர்.












Click it and Unblock the Notifications