இதே வேலையா போச்சு.. ஏபிவிபி கும்பலை கைது பண்ணுங்க.. JNU மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு வைகோ கண்டனம்!
மாணவர்களை இலக்காக வைத்து வன்முறையை ஏவுவது தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டதாக வைகோ விமர்சித்துள்ளார்.
சென்னை : டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கொடூர வன்முறையை ஏவிய ஏ.பி.வி.பி கும்பலை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஊர்வலம் சென்றனர்.
தொடர்ந்து ஐஐடி வளாகங்களில் விளிம்பு நிலை சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள் உயிரிழப்பதன் பின்னணியில் உள்ள சாதி, மத ஒடுக்குமுறை குறித்த ஆவணப்படம் ஒன்று அங்கு திரையிடப்பட்டது. இதற்கு ஏபிவிபி மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு அங்கிருந்த பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் படங்களை சேதப்படுத்தியுள்ளனர்.
ஏபிவிபி அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தியதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வைகோ கண்டனம்
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனமான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்களை கல்வித் துறையில் மட்டுமின்றி, அரசியல் பொருளாதாரத் துறையிலும் ஒளிரச் செய்து வருகிறது. இங்கு இந்திய நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் நிலைப் பெற பல்வேறு சித்தாந்தங்கள் பற்றிய கருத்தியல் விவாதங்கள் நடப்பதும், சமூகநீதி, பெண்ணுரிமை, சமத்துவம், மதச் சார்பின்மை மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட கோட்பாடுகள் பற்றி மாணவர்களிடையே கருத்தரங்கம், பயிலரங்கம் நடப்பதும் பல ஆண்டுகளாக தொடர்கின்றன.

ஏபிவிபி
2014ல் மோடி தலைமையில் மத்திய பாஜக அரசு அமைந்த பின்னர் ஜே.என்.யூ இந்துத்துவ மத வெறிக் கும்பலின் கொடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி மற்றும் இந்துத்துவ குண்டர்கள் ஜே.என்.யூ வில் அத்துமீறி நுழைந்து, முற்போக்கு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யும் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், குறிப்பாக இஸ்லாமிய, தலித் மாணவர்களை இலக்காக வைத்து வன்முறையை ஏவுவதும் தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டன.

துணைபோகும் ஜே.என்.யூ நிர்வாகம்
இதற்கு ஜே.என்.யூ நிர்வாகமும் துணைபோகிறது. பிப்.19 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், ரிசர்வேசன் கிளப் என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கைது செய்யுங்கள்
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயமடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பொதுவுடைமைத் தலைவர்களை இழிவுபடுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பலின் இத்தகைய செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கொடூர வன்முறையை ஏவி, பெரியார் திருவுருவப்படத்தையும் சேதப்படுத்திய ஏ.பி.வி.பி கும்பலை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். காயம் அடைந்த மாணவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications