மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாகிறாரா வைகோ? பாஜக வீசிய வலையில் மதிமுக? குழம்பி கவனிக்கும் திமுக!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி திமுகவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்டை கொடுக்க போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தற்போது அதிருப்தியில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், பாஜகவோ, தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைமை என்றால் அவர்தான் இதுகுறித்து அறிவிக்க வேண்டும். ஆனால் மாறாக கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் அறிவிக்கிறார்கள். இதிலிருந்து அதிமுக எத்தனை பலவீனமாகிவிட்டது என திமுகவினர் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

மேலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என பாஜக சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி, எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அமைதியாக இருப்பது அதிமுகவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என விமர்சனங்கள் எழுகின்றன.
பாஜக கூட்டணி
இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் நிச்சயம் விரிசல் விடும் என திமுக சொல்லி வருகிறது. அதே வேளையில் திமுக கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணி என்று சொல்லும் நிலையில் அந்த கூட்டை கலைக்க பாஜக ஒரு தகவலை தெரிவித்துள்ளது.
எல் முருகன்
அதாவது மத்திய அமைச்சர் எல்.முருகனோ, திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கொளுத்தி போட்டுள்ளார். இந்த கட்சி விடுதலைச் சிறுத்தைகளாக இருக்குமா என பலர் சந்தேகம் கிளப்பினர்.
திருமாவளவன் தெளிவு
கூட்டணியை பொருத்தமட்டில் திருமாவளவன் தெளிவாக இருக்கிறார். அதாவது பாஜக, பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் விசிக ஒரு போதும் இருக்காது என தெரிவித்துள்ளார். இதனால் யார் என எல் முருகனிடம் கேட்ட போது, "நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் கட்சியானது வாஜ்பாய் காலத்தில் எங்களுடன் கூட்டணியில் இருந்தது" என ஒரு க்ளூ கொடுத்துள்ளார்.
மதிமுகதானா
அதை வைத்து கூட்டி கழித்து பார்த்தால் அது மதிமுக என்பது தெரிகிறது. உண்மையிலேயே மதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என தெரியவில்லை. ஆனாலும் திமுகவில் இருக்கும் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மமக, இந்திய முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை பாஜக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை.
தொடர் அதிருப்தி
ஆனால் மதிமுகவுக்கு தொடர்ந்து அதிருப்தி ஏற்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. அதாவது 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட மதிமுக விரும்பியது. அப்படியென்றால் 4 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் 6 தொகுதிகள் ஒதுக்கலாம் என திமுக சொன்னது.
6 தொகுதிகள்
இதையடுத்து 6 தொகுதிகளை பெற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் கட்சியினரை போட்டியிட வைத்தார் வைகோ. அது போல் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியது. அந்த ஒன்றில் கூட உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நிர்பந்தித்தது.
மதிமுகவினர் ஏற்கவில்லை
இதை மதிமுகவினர் ஏற்கவில்லை. அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என். நேரு மேடையில் இருக்கும் போதே தனது ஆதங்கத்தை துரை வைகோ கொட்டித் தீர்த்தார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் எங்கள் கட்சியை எப்படி வளர்ப்பது, செத்தாலும் சாவேனே தவிர உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன் என தெரிவித்தார்.
மதிமுக தனிச் சின்னத்தில் போட்டி
இதையடுத்து மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக அனுமதித்தது. நாடாளுமன்றத்தில் தலைசிறந்த எம்பி என்பதை வைகோ எத்தனையோ தருணங்களில் மத்தியில் ஆளும் அரசை லெப்ட் ரைட் வாங்கியதன் மூலம் நிரூபித்துள்ளார்.
கமலுக்காக வைகோ உதாசீனம்?
அப்படியிருக்கும் சூழலில் கமல்ஹாசனுக்காக , வைகோவுக்கு வாய்ப்பளிக்க திமுக மறுத்துவிட்டதன் மூலம் தங்களை திமுக உதாசீனப்படுத்திவிட்டதாக துரை வைகோ கருதினார். இதை மறைமுகமாகவும் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார். இதனால் மதிமுகவுக்கு, திமுகவுடன் அதிருப்தி நிலவி வருகிறது என்பது நன்றாகவே தெரிகிறது.
வலை விரித்த பாஜக
இதை நன்கு தெரிந்து கொண்ட பாஜக, எப்படியாவது மதிமுகவை தங்கள் வலைக்குள் விழ வைத்துவிடலாம் என தூண்டில் போட்டு காத்திருக்கிறது. அதாவது மதிமுகவுக்கு தேர்தல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் அக்கட்சிக்கு வரும் 2026 ஆம் சட்டசபை தேர்தலில் குறைந்தது 10 இடங்களையாவது திமுக ஒதுக்க வேண்டும். ஆனால் திமுக அதை செய்யாது.
10 தொகுதிகள்
இதனால் பாஜகவுக்கு சென்று அங்கு 10 தொகுதிகளை தாராளமாக கேட்டு வாங்கலாம் என மதிமுக தலைமை கருதுகிறதாம். அது போல் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக மாநிலங்களவை தேர்தலில் அல்லது அதற்கு முன்பு நடக்கும் மற்ற மாநிலங்களின் மாநிலங்களவை தேர்தலில் வைகோவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என ஆசை வார்த்தை காட்டப்படலாம் என சொல்லப்படுகிறது.
மதிமுக என்ன செய்யும்
இது போன்ற பேச்சுக்கள் எல்லாம், எங்கே மதிமுக கையை விட்டு நழுவிவிடுமோ என திமுகவை அச்சமடைய செய்வதற்கும் அடிபணிவதற்கும் என சிலர் கருதுகிறார்கள். ஆனால் திமுகவோ, மதிமுக கூட்டணி மாறினால் எந்த கவலையும் கொள்ளாது என விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு கூட்டணியில் இருக்கும் போதே மற்றொரு கூட்டணிக்கு அச்சாரம் போடும் வரலாறு மதிமுகவில் உள்ளது. எனினும் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் மதிமுக, கூட்டணிக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications