பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு வாழ்வியல் வட்டத்தில் எது எது சுகம் ? வைரலாகும் வைரமுத்து பாடல்
சென்னை : பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு வாழ்வியல் வட்டத்தில் எது எது சுகம் ? என்னென்ன சுகம்? என்பது குறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்வே சுகம் சுகம்வானும் மண்ணும் சுகம் சுகம் பேரண்டம் சுகம் சுகம் என்ற பாடல் யூடியூப்பில் வைரலாகி வருகிறது
கவிஞர் வைரமுத்து 'நாட்படு தேறல்' 100 பாடல்கள் திட்டத்தின் கீழ் . 100 இசையமைப்பாளர்கள் மற்றம் 100 பாடகர்கள் மற்றம் 100 இயக்குநர்களுடன் வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடல்களை வெளியிட்டு வருகிறார்,

அந்த வகையில் இன்று வாழ்வே சுகம் சுகம் என்ற பாடலை தனது யூடியூப்பில் வைரமுத்து வெளியிட்டுள்ளார். இப்பாடலை வைரமுத்து எழுதி உள்ளார். இசைமைத்து பாடி உள்ளார் ஹரிகரன். தேனி ஈஸ்வர் இப்பாடலை இயக்கி உள்ளார்.
பாடலின் வரிகள் பின்வருமாறு:
வாழ்வே சுகம் சுகம்
வானும் மண்ணும் சுகம் சுகம்
பேரண்டம் சுகம் சுகம்
பிறவியின் பயனே சுகம் சுகம்
மாதாவின் அணைப்பினில்
மார்பக வெப்பம் சுகம் சுகம்
தாலாட்டில் இசைபெறும்
தாய்மொழிச் சொற்கள் சுகம் சுகம்
பூமியின் நலன்களைப்
புலன்களில் நுகர்தல் சுகம் சுகம்
புலன்களைக் கடந்ததை
புத்தியில் உணர்தல் சுகம் சுகம்
ஈசன் அருளா சுகம் சுகம்?
ஈசன் ஆதல் சுகம் சுகம்
இறைமை என்பது கரைந்துபோய்
இயற்கையில் இழைதல் சுகம் சுகம்
தாவர இலைகளின் தலைகளில்
தங்கிய மழைத்துளி சுகம் சுகம்
ஒருலட்சம் நதியில் குளித்திடும்
ஒற்றைச் சூரியன் சுகம் சுகம்
நீல வானில் படிந்திடும்
நிறமற்ற நிறங்கள் சுகம் சுகம்
நீண்ட இரவில் குமிழ்விடும்
நிசப்த இடைவெளி சுகம் சுகம்
கண்ணொருபால் கொஞ்சம் மயங்கினால்
இன்னொரு பால்தான் சுகம் சுகம்
காமம் கடந்த யோகமே
காதலென் றறிதல் சுகம் சுகம்
தேர்ந்தபின் தெளிந்தபின்
திருமணம் கொள்வது சுகம் சுகம்
முதலிர வென்பது இருவருக்கும்
முதல் முதல் ஆதல் சுகம் சுகம்
கருவுற்ற பெண்ணாள் வயிற்றினைத்
கணவன் தடவுதல் சுகம் சுகம்
தகப்பன் ஆக்கிய மனைவிமேல்
தலைவன் கண்ணீர் சுகம் சுகம்
தூங்கிய பிள்ளையைச் சோதித்துத்
துணையை எழுப்புதல் சுகம் சுகம்
மழலைகள் குடைக்குள் ஒதுங்கிட
மழையில் நனைவது சுகம் சுகம்
வேர்வையில் ஈட்டிய அரும்பொருள்
நேர்வழி சேர்த்தல் சுகம் சுகம்
நாளைக்குச் சேமித்த பெரும்பொருள்
ஏழைக்கு வழங்குதல் சுகம் சுகம்
ஞானம் எழுதிய கோடுபோல்
நரையொன்று விழுதல் சுகம் சுகம்
வாழ்க்கையின் விளிம்பிலே
வார்த்தைகள் குறைவது சுகம் சுகம்
பற்றிய பந்தம் பற்றுகளை
முற்றும் அறுத்தல் சுகம் சுகம்
உயிரும் பொருளும் ஒன்றென
உணர்ந்து முடித்தல் சுகம் சுகம்
அண்டத்தில் சுழலும் அனைத்தையும்
பிண்டத்தில் உணர்தல் சுகம் சுகம்
பிண்டத்தில் துடிக்கும் பொருள்களை
அண்டத்தில் கலத்தல் சுகம் சுகம்
நீண்ட வாழ்வின் நிகழ்வினை
நினைவுறும் ஒருகணம் சுகம் சுகம்
ஆழ்ந்த நினைவின் சங்கிலி
அறுபடும் மறுகணம் சுகம் சுகம்
யாசித்த படியே துயில்கையில்
யாத்திரை முடிதல் சுகம் சுகம்
நேசித்த உயிரின் கரங்களில்
நிம்மதி பெறுதல் சுகம் சுகம்












Click it and Unblock the Notifications