வண்டலூர் பள்ளியில் என்ன நடந்தது?.. ஆடையின்றி கிடந்த மாணவி.. மாணவிகள் கூறும் ஷாக் தகவல்கள்!
சென்னை: வண்டலூர் அருகே அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக பள்ளி மாணவிகள் தெரிவித்துள்ள பல்வேறு தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கழிவறைக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது மர்மகும்பல் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவியை மயக்கமடைய செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி கழிவறையில் மயக்க நிலையில் இருந்த மாணவியின் உடலைப் பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சக மாணவிகள், ஆசிரியர்கள் மீட்டு பாதிக்கப்பட்ட மாணவியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இந்நிலையில் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கழிவறையில் கிடந்த மாணவி
ஆனால், இந்த சம்பவத்தை மறைக்க முயற்சிகள் நடப்பதாக அப்பள்ளி மாணவிகள் கூறியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அப்பள்ளி மாணவிகள் கூறியதாவது: கழிவறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அந்த மாணவி சென்றார். அப்போது, இன்னொரு மாணவி கழிவறைக்குச் சென்றபோது தான் பாதிக்கப்பட்ட மாணவி ஆடையின்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பள்ளி வேலை ஆட்களிடம் கூறியதையடுத்து மாணவியை மீட்டனர்.
நன்றாகப் படிக்கும் மாணவி
அவள் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவி. கடந்த தேர்வில் கூட 5 வது ரேங்க் எடுத்தார். ஆனால், இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த மாணவி சரியாகப் படிப்பதில்லை என்பதால் தூக்குப் போட முயற்சித்ததாக கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி நன்றாகப் படிக்கக் கூடியவர். தற்கொலைக்கு முயற்சி செய்பவர் ஏன் ஆடையை கழட்டிப் போட்டு விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ய வேண்டும். அவள் என்ன மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணா என்று கேள்வி எழுப்பினர்.
மாணவிகள் குற்றச்சாட்டு
மேலும், மாணவியின் மருத்துவர் பரிசோதனை ரிப்போர்ட் பாசிட்டிவ் என வந்தால் கூட யாரிடமும் சொல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மாணவிக்கு பாம்பு கடித்துவிட்டது, மயக்கம்போட்டு விழுந்து விட்டார் என்று சொல்லுங்கள் என்று கூறுகின்றனர். பள்ளி சுற்றுச்சுவரின் உயரம் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் எகிறி பள்ளிக்குள் குதிக்க முடியும். சுற்றுச்சுவருக்கு அருகில் இருக்கும் ஏரிக்கரைப் பகுதியில் ஏராளமானோர் மது அருந்துவார்கள். ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினர்.


Click it and Unblock the Notifications
