வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: தென்பகுதியில் ஓடப்போகும் ரூட்கள் இதுதானா? பயணிகளை குளிரவைக்கும் அப்டேட்
சென்னை: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு விடப்படும்? எந்த ரூட்டில் முதலில் விடப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 9 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. இதில், தெற்கு ரயில்வேயில் முதல் ரூட்டாக திருவனந்தபுரம் - மங்களூர் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியன் ரயில்வே பயணிகளின் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் முயற்சிகளை செய்து வருகிறது. சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் வந்தே பாரத் சொகுசு ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்பட்டன.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
தமிழகத்திலும் சென்னை - பெங்களூர், சென்னை - நெல்லை என பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சொகுசு வசதிகளுடன் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. பெட்டிகள் முழுதும் ஏசி வசதி, சொகுசு இருக்கைகள், தானியங்கி கதவு என பல்வேறு வசதிகள் இருக்கிறது.
ஆனால் ஒரே ஒரு குறையாக படுக்கை வசதிகள் இந்த ரயிலில் இல்லாமல் இருந்தது. இதனால் தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அவதியடைந்தது. தொடந்து படுக்கை வசதி உள்ள வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று ரயில்வேக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இதனை தொடர்ந்து பயணிகளின் கோரிக்கையை ஏற்று வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. சென்னை ஐசிஎப்பில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்தது. தற்போது ரயில்கள் தயார் நிலையில் உள்ளன. இதற்கான சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றது. இதனால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு விடப்படும் என்றும், எந்த ரூட்டில் முதலில் விடப்படும் என்ற எதிர்பார்ப்பும் பயணிகள் மத்தியில் இருந்து வந்தது.
இந்த நிலையில், முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வடக்கு ரயில்வேயில் இயக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 9 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. தெற்கு ரயில்வேயில் முதல் ரூட்டாக திருவனந்தபுரம் - மங்களூர் வழித்தடத்தில் இயக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
திருவனந்தபுரம் - பெங்களூர் ரூட்
அதுமட்டும் இன்றி திருவனந்தபுரம் - பெங்களூர், கன்னியாகுமரி - ஸ்ரீநகர் (கொங்கன் வழித்தடம்) ஆகிய வழித்தடங்களும் பரிசீலனையில் உள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் முழுவதும் ஏசி வசதி கொண்டது ஆகும். இந்த ரயில்களில் 1,128 பயணிகள் பயணிக்க முடியும். தொலை தூர பயணங்களுக்கு இந்த ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களானது 800 முதல் 1,200 கிலோ மீட்டர் தொலைவு வரை செல்லும் பயணிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 பெட்டிகள் இந்த ரயிலில் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 11 ஏசி மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட பெட்டிகள், 4 இரண்டு அடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஒரு முதல் வகுப்பு பெட்டி என மொத்தம் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் 823 பேர் பயணம் செய்ய முடியும்.
எத்தனை கிமீ வேகத்தில் செல்லும்
முதலில் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 180 கிமீ வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, அனைத்து பெட்டிகளும் முழுவதும் ஏசி வசதி, அனைத்து பெட்டிகளிளும் கண்காணிப்பு கேமராக்கள், எமெர்ஜென்சி காலங்களில் பயணிகள் ரயில் மேலாளர், லோகோ பைலட் இடையேயான தகவல் தொடர்புக்காக அவசரமாக பேசுவதற்கான வசதிகள், தீ பாதுகாப்பு கருவிகள், செக்யூரிட்டி கேமரா, பயோ டாய்லட் போன்ற பல வசதிகள் உள்ளன.
இதேபோன்று குளிப்பதற்கு என்று ஹீட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு படுக்கைகள் மற்றும் டாய்லட்கள், சென்சார் வசதி கதவுகள், தானியங்கி வெளிப்புற கதவுகள் என பல வசதிகள் உள்ளது.


Click it and Unblock the Notifications
