சென்னை- கோவை வந்தே பாரத்.. 8 பெட்டிகள் தான்.. 130 கி.மீ வேகம்.. ரயிலை பற்றிய முழு விவரங்கள் இதோ!
சென்னை: சென்னை- கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். வந்தே பாரத் ரெயிலில் பகல் நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்காது. எனவே, 16 பெட்டிகளுடன் ரயிலை இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கருதி 8 பெட்டிகளை கொண்டு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை மற்ற ரயில்களைவிட வேகமாக செல்வதால் சென்னை - கோவை இடையேயான பயண நேரம் 6 மணி நேரம் 10 நிமிடங்களாக இருக்கும்.
இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சகம் எடுத்து வருகிறது. அந்த வகையில், அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

பயண நேரத்தை பெரிதும் குறைப்பதோடு சொகுசு வசதிகளும் இருப்பதால் வந்தே பாரத் ரயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு நவம்பர் 11-ந்தேதி சென்னை - மைசூரு இடையில் 5-வது வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டது.
சென்னை கோவை வந்தே பாரத் ரயில்: சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. 12 -வது வந்தே பாரத் ரயிலாக சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த புதிய சேவையை நாளை சென்னை சென்ட்ரலில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரயில் இதுதான் ஆகும். கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்த ரயில் வந்து சேரும். திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதேபோல், மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை இடையிலான 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். இரவு 8.15 மணிக்கு இந்த ரயில் கோவை சென்றடையும். வாரத்திற்கு ஆறு நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும். புதன்கிழமை மட்டும் இந்த ரயில் சேவை இருக்காது. தற்போது வெளியாகியிருக்கும் அட்டவணைப்படி இந்த ரயில் கோவையில் இருந்து சென்னைக்கு 5 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். மொத்தம் 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதி, சொகுசான இருக்கைகள் என பயணிகள் விமான பயணங்களுக்கு நிகரான சொகுசு வசதிகளை உணர முடியும் என்று அதிகாரிகள் சொல்கின்றனர். 8 பெட்டிகளில் 536 இருக்கைகள் கொண்டதாக இந்த ரயில் இருக்கும். பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ரயில் பெட்டியின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

130 கிலோ மீட்டர் வேகத்தில் : இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை (இன்று) தொடங்கி வைக்க உள்ளார். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும். இந்த நிலையில், சென்னை - கோவை இடையில் இன்று தொடங்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள் 5 மணி 50 நிமிடத்தில் சென்னையில் இருந்து கோவை சென்றடைய முடியும். இதேபோல, சென்னை - பெங்களூர் வரையிலான சதாப்தி ரெயிலினின் வேகத்தையும் ஜீன் மாதம் முதல் அதிகரிக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதேபோல, இந்த வருடத்தில் 44 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த மாதம் சென்னை - ரேணிகுண்டா வழித்தடத்திலும், அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடத்திலும் ரெயிலின் இயக்க வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது ரெயிலின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், பயணிகளின் ஒட்டுமொத்த போக்குவரத்து நேரத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications