இந்தியாவுக்கே கல்வியைக் கொண்டு வந்தது கிறிஸ்தவ மிஷனரியா? வன்னியரசு பேச்சுக்கு தமிழிசை கண்டனம்!
சென்னை: இந்தியாவில் முதன்முதலில் கல்வியைக் கொண்டு வந்தது கிறிஸ்தவ மிஷனரி இயக்கம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியும் தமிழக அமைச்சருமான வன்னியரசு பேசியதற்கு சில அமைப்புகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில், போலி தமிழ் பற்றோடு கல்வி வளர்ச்சியில் இந்து மதத்தின் பங்கை மறைக்கும் முயற்சியை முறியடிப்போம் என வன்னியரசுக்கு பாஜக முன்னாள் தலைவர் தலைவர் தமிழிசை செளந்தரராஜன கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஜூலை 25ஆம் தேதி திண்டிவனத்தில் ஒரு பள்ளியில் பேசும் பொழுது திரு வன்னியரசு அவர்கள்.. இந்தியாவில் கல்வியை போதித்ததே கிறிஸ்தவ மிஷனரிகள் தான் என்று பேசி இருக்கிறார்.
அப்படி என்றால் இவர் அக்காலத்திலேயே இந்தியாவில் கல்வி உயர்ந்திருந்ததையும் நாளந்தா பல்கலைக்கழகம் போன்றவற்றில் அயல் நாட்டுவர் படிக்கும் அளவிற்கு உயர்நிலை அடைந்திருந்ததையும். தமிழ்நாட்டில் நிலவி வந்த அறிவாற்றலையும் கொச்சைப்படுத்துகிறார் என தமிழ் மக்கள் உணர வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன்
ஒரு மதத்தை உயர்த்தி பிடிப்பதற்காக நம் தொன்மைத் தமிழநாட்டில் இந்து மத கலாச்சாரத்தோடு கல்வி வளர்ந்தது என்பதை மறைப்பது போல் பேசி வருகிறார்கள். தமிழ் நாகரிகம் உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றாக, கல்வி பெரும்பாலும் வாய்மொழி மரபின் மூலம் பரவியது. சங்க இலக்கியங்கள், இலக்கியம், இலக்கணம், இசை, சமயம் மற்றும் வாழ்க்கை நெறி ஆகியவற்றில் தமிழர்களின் உயர்ந்த கல்வி மரபை எடுத்துக்காட்டுகின்றன.
வன்னியரசு
அந்தக் காலத்தில் குருகுலக் கல்வி முறை பரவலாக இருந்தது. மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலில் தங்கி கல்வி கற்றனர். சமயம், அறநெறி, தத்துவம், வானியல், கணிதம், மருத்துவம் போன்ற பல்வேறு பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அதேபோல் வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் பிற சாஸ்திரங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் வழியாக வேதக் கல்வியும் வளர்ச்சி பெற்றது.. இதன் மூலம் தமிழில் ஆற்றலும் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதும் அதிகரித்ததே தவிர குறையவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை இன்றைய அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவ மிஷனரிகள்
தமிழ் உலகின் தொன்மையான செம்மொழிகளில் ஒன்றாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள், அறம், ஆட்சி, காதல், சமூக வாழ்க்கை போன்ற பல்வேறு துறைகளை எடுத்துரைக்கும் அரிய அறிவுக் களஞ்சியமாக விளங்குகின்றன. திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் மையமாகக் கொண்டு மனித வாழ்வுக்கான உயரிய நெறிமுறைகளை எடுத்துரைக்கும் உலகப் புகழ்பெற்ற நூலாகும். இது தமிழ் சமூகத்தையும் உலக சிந்தனையையும் ஆழமாகப் பாதித்துள்ளது.
தமிழ் மொழி
தொல்காப்பியம் உலகின் தொன்மையான இலக்கண நூல்களில் ஒன்றாகும். தமிழ் மொழியின் இலக்கணம் மட்டுமல்லாது, மொழியியல், இலக்கியவியல் மற்றும் பண்பாட்டுச் சான்றுகளையும் பதிவு செய்துள்ள சிறப்புமிக்க நூலாகும். கல்வி மையங்களாக விளங்கிய கோயில்கள் பண்டைய தமிழ்நாட்டில் கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் கல்வி மையங்களாகவும் விளங்கின. அவற்றில் நூலகங்கள், பாடசாலைகள் மற்றும் மடங்கள் செயல்பட்டு சமயம், தத்துவம், கணிதம், அறிவியல் போன்ற துறைகளில் கல்வி வழங்கின.
கல்வி ஆராய்ச்சி
காஞ்சிபுரமும் சிதம்பரமும் அக்காலத்தின் முக்கியமான அறிவு மையங்களாகத் திகழ்ந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள் வந்து கருத்தரங்குகள், விவாதங்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த சோழர்கள், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகித்தனர். கலை, கட்டிடக்கலை, பொறியியல், கணிதம், சமயக் கல்வி, வானியல் உள்ளிட்ட பல துறைகளுக்கு அவர்கள் அளித்த ஆதரவு குறிப்பிடத்தக்கது.
சோழ மன்னர்கள்
சோழர்கள் கட்டிய பிரம்மாண்டமான கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி, கல்வி மையங்களாகவும் செயல்பட்டன. இங்கு வேதம், ஆகமம், இலக்கியம், தத்துவம், கணிதம், வானியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன. தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு சோழ மன்னர்கள் சிறப்பான ஆதரவு வழங்கினர். அவர்களது ஆட்சியில் பல புலவர்கள் உருவாகினர்; தமிழ் நூல்கள் பாதுகாக்கப்பட்டு வளர்ச்சியடைந்தன. 2. பக்தி இயக்கமும் கல்வி வளர்ச்சியும் இடைக்காலத்தில் பக்தி இயக்கம் தமிழ்நாட்டின் கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சியில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
இறைபக்தி
ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள், இறைபக்தியை மக்களிடம் எளிய தமிழில் பாடல்களாகப் பரப்பினர். இதன் மூலம் கல்வி, அறநெறி மற்றும் ஆன்மிகச் சிந்தனைகள் பொதுமக்களிடம் சென்றடைந்தன. நாலாயிர திவ்யப் பிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்கள் சமய நூல்களாக மட்டுமல்லாமல், தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் ஒழுக்கக் கல்வியின் முக்கிய ஆதாரங்களாகவும் விளங்கின.
போலி தமிழ் பற்று
இசை, கவிதை, தத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைத்த இந்த இயக்கம், கல்வியை மக்களிடம் கொண்டு சென்ற ஒரு சமூகப் புரட்சியாக அமைந்தது ஆக வன்னியரசு போன்றவர்களின்.. போலி தமிழ் பற்றோடு கல்வி வளர்ச்சியில் இந்து மதத்தின் பங்கை மறைக்கும். முயற்சியை முறியடிப்போம்." காவியத்தமிழையும்" "காவித்தமிழையும்".ஓங்கி ஒலிப்போம்! ஆன்மீக தமிழை ஆள்பவர்கள் மறைத்தாலும் ஆண்டாள் தமிழை.. ஓங்கிஒலிப்போம்!" என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
