அட.. ஒரு பக்கம் பாஜக.. மறுபக்கம் விசிக.. அவர் கோரிக்கை வைக்க.. இவர் வழிமொழிய.. ஒரே ஆச்சரியம்தான்
எடப்பாடி பழனிசாமி இன்றைய பேரவையிலும் கலந்து கொள்ளவில்லை
சென்னை: மிக முக்கியமான சம்பவம் ஒன்று இன்றைய பேரவையில் நடந்துள்ளது.. விசிகவும், பாஜகவும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்..!
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டப்பேரவை துவங்கியது.. அண்ணாமலை பல்கலையுடன் ஜெ.பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.
எதிர்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருந்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

பஞ்சமி நிலங்கள்
அதேபோல, சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசும்போது, 1 லட்சத்து 47 ஆயிரத்து 296 ஏக்கர்நிலம் பட்டியலின மக்களுககு பஞ்சமி நிலமாக வழங்கப்பட்டுள்ளது.. அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் அவர்களிடமே உள்ளதா? அல்லது தனி அமைப்பினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, அந்த அறிக்கையின்படி ஆக்கிரமிப்பில் இருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

விவாதங்கள்
மேற்கண்ட 2 முக்கிய அறிவிப்புகள் இன்றைய தினம் பேரவையில் வெளியான நிலையில், இன்றைய மானியக் கோரிக்கை விவாதமும் முடிந்த பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனை செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் பேசும்போது, அரசு சொத்துக்களை ஒன்றிய அரசு தனியார் மயமாக்கும் என அறிவித்து வரும் நிலையில் பல்வேறு தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என மானிய கோரிக்கையில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஜெயலலிதா
நெருக்கடியான நிதிச்சுமை இருக்கும் சூழலில் ஆக்கபூர்வமாக செயல்படாமல் பெயரளவில் வைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலை கழகத்தை பெருமை வாய்ந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைத்து இருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.. அதேபோல, பன்றி போன்ற அழியும் தருவாயில் உள்ள கால்நடைகளைப் பராமரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முன்மொழிந்த கோரிக்கையை பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வழி மொழிந்துள்ளார்.

வலியுறுத்தல்
அதேபோன்று பஞ்சமி நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுக்கப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் கோரிக்கையை, இன்று பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்... இதனை ஆரோக்கியமானதாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி பார்க்கிறது" என்றார்.

பாஜக
பொதுவாக, விசிக - பாஜக இரண்டு கட்சிகளுமே பரம எதிரி கட்சிகள்.. எலியும் பூனையும்போல மோதி கொள்பவர்கள்.. கருத்தியலாகவும் சரி, கொள்கை ரீதியாகவும் சரி, இரு கட்சிகளுக்குமே ஆகாது.. திமுக - அதிமுகவைவிட, பாஜக - விசிக கட்சிகளுக்கான மோதல்களும், உரசல்களும் அதிகம்தான்.. இவர்கள் தேர்தலில் போட்டியிட்டால்கூட, ஒரே தொகுதியில் மோதி கொள்வார்கள்.. ட்விட்டரிலும் இவர்களுக்குள் நடக்கும் சண்டைகள்தான் அதிகம்..

மகிழ்ச்சி
அப்படி இருக்கும்போது, இன்றைய தினம் ஒரேவிதமான கோரிக்கைகளை விசிகவும், பாஜகவும் தெரிவித்துள்ளதும், வழிமொழிந்துள்ளதும் அரசியல் நாகரீகத்தின் இன்னொரு பரிமாணமாக பார்க்கப்படுகிறது.. எதிரிக்கட்சிகளாக இருந்தாலும்சரி, "மக்கள் நலன்" என்று வந்துவிட்டால் போதும், ஒன்றிணைந்து செயல்படுவதில் நம் கட்சி தலைவர்களை மிஞ்ச ஒருத்தரும் கிடையாது..!












Click it and Unblock the Notifications