நாங்க 2 சீட்டு குறைஞ்சாலும் பிரச்சனை இல்ல! அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் திட்டம் - திருமாவளவன்
சென்னை: நாங்கள் இரண்டு சீட்டு குறைந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால், அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் உடனடி திட்டம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்திருக்கிறார்.
சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அதிமுக என்கிற ஒரு திராவிட இயக்கத்தில் வளர்ந்தவர்தான் நயினார் நாகேந்திரன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் தலைமை தாங்கிய திராவிட இயக்கம், பெரியார் இயக்கம் அதிமுக.

அந்த இயக்கத்திலேயே வளர்ந்தவர் இன்றைக்கு பாஜக தலைவராக இருக்கிறார். இதெல்லாம் தெரிந்துதான் அவரை தலைவர் ஆக்கி இருக்கிறார்கள் பிஜேபி காரர்கள். அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் உடனடித் திட்டம். இதை அதிமுக காரர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்? நாங்க ரெண்டு சீட்டா குறையுறோம், ஒரு சீட்டா குறையுறோம்.. அது பிரச்சனை இல்லை.
ஏன்னா நாங்கள் ஆண்ட கட்சி இல்லை. ஆண்ட கட்சி இன்றைக்கு 65 எம்எல்ஏக்களை கொண்டு இருக்கிற கட்சி. அது தேய்மானம் அடைவதற்கு அதிமுக உடன்படுகிறதா? பாஜக அப்படி ஒரு செயல் திட்டத்தோடு இயங்குகிறதா? இல்லையா? முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா என்கிற இருபெரும் தலைவர்களை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதை நீங்கள் உடன்பாடு இல்லை என்று சொல்லுவது உடன்பாடான கருத்தாக தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களுடன் எப்படி இவர்கள் பயணிக்க முடியும்? எப்படி பயணிக்க துணிகிறார்கள்? பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்தக்கூடிய பாஜக சங் பரிவார் அமைப்புகளோடு அதிமுக பயணிப்பது என்பது தற்கொலைக்கு சமமானது" என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் முருக பக்தர்கள் என்கிற பெயரில், இந்து முன்னணி மற்றும் சங் பரிவார் அமைப்புகள் மதுரையில் மாநாட்டை நடத்தியிருந்தன. இந்த மாநாட்டில் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றிருந்தார்கள். இந்த மாநாட்டில் வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில், பெரியார் மற்றும் அண்ணா குறித்து சர்ச்சைக் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. இதனை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாநாட்டில் கேள்வி எழுப்பவில்லை என்று திமுக விமர்சித்திருந்தது.
"அண்ணாவைக் கேவலப்படுத்துவதை 'அண்ணா' என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள்" திமுக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுயமரியாதையோடு கொள்கையை விட்டுக்கொடுக்காத இயக்கமாக என்றைக்கும் அதிமுக இருக்கும்" என்று விளக்கமளித்தார்.
இதனை தொடர்ந்துதான் தற்போது அதிமுக குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications