"ஆளும் கட்சியாக விசிக.. திருமா தான் முதல்வர்..” CM 2031 நம்பர் பிளேட் சர்ச்சை குறித்து வன்னி அரசு
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் பயன்படுத்திய CM 2031 என்ற நம்பர் பிளேட் போலியானது என்பது சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் வன்னி அரசும் தனியாக விளக்கம் கொடுத்துள்ளார். அதேநேரம் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக்குவதே தங்கள் நோக்கம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, விசிக தலைவர் தொல். திருமாவளவன் 'CM 2031' பதிவெண் கொண்ட காரில் பயணித்தது தொடர்பாக எழுந்த விவாதங்களுக்குப் பதிலளித்து பேசினார்.

என்ன நடந்தது
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், ""ஒவ்வொன்றையும் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக பெரிதுபடுத்துகிறார்கள். அந்த கார், எங்கள் தலைவருக்கு சமூக நீதி விருது வழங்கிய நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்த கார். அந்த காரில்தான் தலைவர் பயணம் செய்தார். இந்தக் கேள்வியை நீங்கள் அந்த ஊடக நிறுவனத்திடம்தான் கேட்க வேண்டும்.
'ஏன் இந்த காரில் அவரை அழைத்துச் சென்றீர்கள்?' என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும். அந்த காரில் எங்கள் தலைவர் திருமாவளவன் ஏற வேண்டும் என்பது அவர்களுடைய ஏற்பாடு. எங்கள் கட்சியின் பொருளாளர் பாலாஜி கூட இது குறித்து விரிவான அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். எனவே, இதை அரசியலுக்காக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
திருமாவளவன் முதல்வர்
ஒவ்வொரு கட்சிக்கும் அக்கட்சியின் தலைவரை முதலவாரக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். எங்கள் தலைவரை முதல்வராக்குவதுதான் எங்களுடைய கனவு.. அதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் கனவு. அதை நோக்கி ஒரு குறியீடாக இது சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், அதை இன்று ஒரு விவாதப் பொருளாக மாற்றி பேசுவது உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்பதையே காட்டுகிறது" என்றார்.
விசிக விளக்கம்
முன்னதாக இது குறித்து விசிக பொருளாளர் பாலாஜி விளக்கம் அளித்திருந்தார். அதில் அவர், "எங்கள் தலைவரின் அரசியல் நகர்வின் பேரெழுச்சியால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஊடக நிறுவனம் சார்பில் "திருமா 35: சமூகநீதியின் சகாப்தம்" என்கிற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்திட விருப்பத்தை வெளிப்படுத்தினார். கட்சியின் தலைமை பொறுப்பாளர்கள் இந்நிகழ்வின் பொருண்மை புரிந்து இதற்கு இசைவளித்தோம். அதனடிப்படையில், கடந்த 19.09.2026 அன்று சென்னை பூந்தமல்லியில் இந்நிகழ்வு நடைபெற்றது.
"நிகழ்ச்சி நிரல், கலந்துகொள்ளும் விருந்தினர்களை முடிவு செய்வது" மற்றும் சில அடிப்படைக் கூறுகளைக் கொண்டு தலைவர் திருமாவளவனை வைத்து படப்பிடிப்பு நடத்துவதற்கும் திட்டமிட்டு இருந்தனர். படப்பிடிப்பின் ஒரு பகுதியாக கூரை திறக்கப்பட்ட வாகனத்தில் தலைவர் வரும் போது படம் எடுக்கப்பட்டது. அந்தக் காட்சியும் வாகன எண்ணும் சமூக ஊடகங்களில் வியப்பிற்குரிய எண்ணிக்கையில் பகிரப்பட்டது.
வாடகை விடப்படும் கார்
படப்பிடிப்புத் தளத்தில் படம் பிடிக்கப்பட்ட அந்த வாகன எண் குறித்து வன்மத்தை நெஞ்சில் நிறுத்தி அவரவர் மலிவு அரசியல் மனநிலையோடு காழ்ப்புணர்ச்சிகளைக் கக்குகின்றனர். இது அவரவரின் அரசியல் தகுதியை தரநிர்ணயம் செய்கிறது. தலைவர் அவர்களை வைத்து படம் பிடிக்கப்பட்ட அந்த விலை உயர்ந்த கார் படப்பிடிப்புகளுக்கு வாடகை விடப்படும் கார்.
மேலும் "ஆளும் கட்சியாக விசிக" என்கிற எதிர்கால திசைப்புள்ளியை வெளிப்படுத்த படப்பிடிப்பு குழுவினர் TN 07 CM 2031 என வாகன எண்ணை வடிவமைத்திருந்தனர். இப்படப்பிடிப்பு தனியார் உள்ளரங்கில் நடைபெற்றது. உள்ளரங்கப் படப்பிடிப்புகளுக்கு விரும்பிய எண்ணைப் பதித்து படமெடுப்பது இயல்பாக நடக்க கூடிய ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ள உள்ளமில்லாமல் உளறிக்கதறும் அர்ப்பர்களின் புலம்பல் ஊடகங்களை உலுக்குகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications
