இவ்வளவு நடந்திருக்கிறதா.. ராகுல் காந்திக்கு தண்டனை கிடைத்தது எப்படி? பரபரப்பை பற்ற வைத்த திருமாவளவன்
சென்னை: ராகுல் காந்தி தகுதிநீக்கம் திட்டமிட்ட அரசியல் சதி என்று விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேபோல், ராகுல் காந்தியை தேர்தலில் நிற்கவிடாமல் செய்ய இத்தகைய நடவடிக்கை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணை பெயரை குறிப்பிட்டு பேசி இருந்தார். இது சர்ச்சையாகியது.

ராகுல் காந்தி குற்றவாளி
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகத்தை ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த வழக்கில், ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

2 ஆண்டுகள்
அந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதனிடையே 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதால், ராகுல் காந்தி எம்பி பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.

ராகுல் காந்தி தகுதிநீக்கம்
ஏனென்றால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8(3)ன்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எந்தக் குற்றத்திற்காகவும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இந்த நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதனால் தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமாவளவன் கருத்து
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், ராகுல் காந்திக்கு எதிரான திட்டமிட்ட அரசியல் சதி. எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள முடியாத அற்பமான அரசியல். பாஜகவின் துணிச்சல் இல்லாத போக்கு இதுவாகும். பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின், பரந்துபற்ற அளவில் மக்களின் பேராதரவை பெற்று ராகுல் காந்தி வளர்ந்து நிற்கிறார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக அரசு, தனிநபர் தொடுத்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் வேண்டுமென்றே சிறை தண்டனை வழங்குவதற்கான செயல்களை பின்னிருந்து செய்திருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இன்னொரு நீதிபதி கொண்டு வரப்பட்டது ஏன்?
ஜனநாயகத்திற்கு மிகவும் தீங்கை விளைவிக்கக் கூடிய இந்த நடவடிக்கை நாட்டுக்கு நல்லதல்ல. இந்த விசாரணை தொடங்கியதில் இருந்து அது எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறது, அங்கு ஏற்கனவே இருந்த நீதிபதி என்ன தீர்ப்பு அளிக்க இருந்தார், பின்னர் இன்னொரு நீதிபதியை கொண்டுவந்து வேகவேகமாக அமர வைத்தது ஏன்? இவர் மூலம் எதற்காக இந்த தீர்ப்பை விரைவாக வழங்க செய்தார்கள் என்பதெல்லாம் பின்னணியில் உள்ளது. இது திட்டமிட்ட அரசியல் சதிதான்.

பாஜக தான் அம்பலப்படும்
அரசின் தலையீடு இல்லாமல், இந்த தீர்ப்பு வரவில்லை. வேண்டுமென்றே இதனை செய்திருக்கிறார்கள் என்பதை இலகுவாக உணர முடிகிறது. ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்து தேர்தலிலேயே போட்டியிடவிடாமல் தடுத்துவிடலாம் என்று சதித்திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாஜக தான் அம்பலப்படுமே தவிர, காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. கர்நாடகாவில் பேசிய பேச்சிற்கு குஜராத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதியை, தீர்ப்பை வழங்கவிடாமல் தடை வாங்குகிறார்கள்.

எதிர்க்கட்சிகளை நசுக்கும் போக்கு
அதன் பின்னர் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட நீதிபதியை அமர வைத்து, தீர்ப்பை அளிக்கிறார்கள். ராகுல் காந்திக்கு ஓராண்டு, ஒன்றரை ஆண்டுகள் கூட தண்டனை கொடுத்திருக்கலாம். ஆனால் 2 ஆண்டுகள் தண்டனை அளித்தால், எம்பி பதவியை தகுதிநீக்கம் செய்ய முடியும் என்பதை அறிந்து தண்டனை அளித்திருக்கிறார். இது எதிர்க்கட்சிகளை நசுக்கும் போக்கு என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications