"விட்டுறாதீங்க" யாரும்.. டேஞ்சர் பாஜக.. "பிராமணர்கள்".. இப்ப தேவாரம் பாடியே ஆகணுமா? திருமாவளவன் நறுக்
சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை வைப்பதற்கான தேவை இப்போது என்ன இருக்கிறது? அந்த திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆதீனங்களை வரவழைத்து தேவாரம் பாடலைப் பாட வைப்பதற்கான அவசியம் என்ன வந்தது?" என்று விசிக தலைவர் திருமாவளவன் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
புதிய நாடாளுமன்றம், நேற்றைய தினம் திறக்கப்பட்டது.. ஆனால், இந்த நாளை, துக்க நாளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அனுசரிக்க முடிவு செய்திருந்தது..

கருப்பு சட்டை:
விழா திறப்பு தினத்தன்று, விசிக உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிய போவதாக, முன்கூட்டியே அறிவித்தும் விட்டனர்..
காரணம், "சாவர்க்கர் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்காதவர். அரசமைப்பு சட்ட கோட்பாடுகளுக்கு எதிரானவர். பாசிச கொள்கையை மண்ணில் விதைத்தவர். அவரது பிறந்தநாளில் இது திறக்கப்படுவது உள்நோக்கம் கொண்டது" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.. அதுமட்டுமல்ல, "செங்கோலில் மதம் சார்ந்த அடையாளம் இருந்தால் அது அரசமைப்புக்கு எதிரானது. அதில் நந்தி சிலை உள்ளது. எனவே அது அரசமைப்புக்கு எதிரானது. அதனால் தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அரசமைப்பு சட்டத்தின் பக்கம் நிற்கிறோம்" என்றும் திருமாவளவன் விளக்கம் தந்திருந்தார்..
இந்நிலையில், மீண்டும் பாஜகவை சீண்டி திருமாவளவன் பேசியுள்ளது, இணையத்தில் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது.. விசிக சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது.. இந்த விழாவுக்கு, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார்.

சமூக நீதி:
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தலைவர்களை ஊக்குவிக்கும் விதமாக சமூகநீதி, சமத்துவம், பன்மைத்துவம், மத சார்பின்மை போன்றவற்றிற்காக பாடுபடும் சான்றோரை கவுரவிக்கும் வகையில் அம்பேத்கர் சுடர் விருது திபங்கர் பட்டாச்சார்யாவுக்கும், பெரியார் ஒளி விருது, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி. ராஜாவுக்கும், காமராஜர் கதிர் விருது, தமிழக சபாநாயகர் அப்பாவுக்கும், திருமாவளவன் வழங்கி பாராட்டினார்.
அதேபோல, காயிதே மில்லத் பிறை விருது, பெங்களூரு சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மோகன் கோபாலுக்கும், செம்மொழி ஞாயிறு விருது, தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கும் வழங்கி கவுரவித்தார் திருமாவளவன். இந்த விருதுகளுடன் ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் அவர் வழங்கி சிறப்பித்தார்.. பிறகு, திருமாவளவன் விழாவில் பேசியதாவது:
தேவாரம்:
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை வைப்பதற்கான தேவை இப்போது என்ன இருக்கிறது? அந்த திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆதீனங்களை வரவழைத்து தேவாரம் பாடலைப் பாட வைப்பதற்கான அவசியம் என்ன வந்தது? தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவினருக்கு இறுக்கமான சூழல் நிலவி கொண்டிருக்கிறது.. கர்நாடகாவில் கூட மெல்ல மெல்ல முன்னேறி வந்துள்ளனர்.. ஆனால் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் முடியவில்லை.. இந்த 2 மாநிலங்களிலும் நிலைமை ஒன்றுதான்.
2 எம்பிக்களுக்கே அவர்கள் திக்கு முக்காடுகிறார்கள்.. அதனால்தான், திட்டமிட்டு அவர்கள் தென்னிந்தியாவில் ஊடுருவ முயற்சிக்கிறார்கள்.. பாஜகவினர் தமிழ்நாட்டை குறிவைத்து விட்டனர்... இந்திய தேசத்தை காப்பாற்றுவதற்காக நாம் அனைவருமே ஒன்றிணைய வேண்டும்... காங்கிரஸ் கட்சியா? பாஜகவா? என்றில்லாமல் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அடிப்படையில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும்.

மக்கள் தொகை:
பாஜக சங்பரிவார் அமைப்புகள் அமைக்க நினைப்பது இந்த கஷ்டம் என்னும் தேசியமே.. இந்து ராஷ்ட்ரம் என்பது பிராமண தேசம்.. இதுதான் அதன் உண்மையான பொருள். இந்த அடிப்படைகூட புரியாமல் மோடியும் அண்ணாமலையும் பிராமணர்களுக்கு எடுபிடி வேலை செய்து வருகிறார்கள்.. இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். மக்கள் தொகை அடிப் படையில் நாடாளுமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை கூடினால் அதனை வரவேற்கலாம்..
ஆனால் பாஜகவினர் திட்டமிட்டு எம்பி உறுப்பினர்களின் எண்ணிக்கையை வட மாநிலங்களில் மட்டும் உயர்த்தி, அதன்பிறகு தேர்தல் வந்தாலும் மத அரசியலை தூண்டி தனக்கென தனி மெஜாரிட்டியை பெற்று தொடர்ந்து ஆட்சியில் இருக்கலாம் என்ற தொலை நோக்கு பார்வையுடன் திட்டமிட்டு இந்த அறிவிப்பை செய்து இருக்கிறார்கள்... அதனால்தான் பாஜகவினரை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.. கட்சிகள் இணையாவிட்டாலும் மக்களே பாஜகவை விரட்டி அடிப்பார்கள்.
நிச்சயம் நிகழும்:
வரும் 2024-ம் ஆண்டு நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும். அப்படி ஆட்சி மாற்றம் நிகழும்போது திரவுபதி முர்மு நிச்சயமாக மரியாதை செய்யப்படுவார்.. தமிழ்நாட்டில் 2 எம்பிக்கள், 4 எம்எல்ஏக்களை கொண்ட சின்ன கட்சியாக விசிக இருக்கலாம்.. ஆனால் இந்திய அளவில் சனாதனத்தை எதிர்க்கும் வலிமையான கட்சி விசிக-வாக உள்ளது.. பாஜகவை வீழ்த்துவது ஒன்றுதான் இப்போதைக்கு நம்முடைய கண்முன்னால் இருக்கின்ற ஒற்றை சவால் என்கின்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications