“இது நாகரீகம் இல்லை”.. செல்வப்பெருந்தகைக்கு பதிலடி கொடுத்த விசிக MLA! திமுக கூட்டணியில் சலசலப்பு
சென்னை: "ராமதாஸும், திருமாவளவனும் நெருக்கமாக இருந்தவர்கள் தான். தேவையென்றால் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி சரி செய்து கொள்வார்கள்." என செல்வப்பெருந்தகை கூறி இருந்த நிலையில் அவரது கருத்துக்கு விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி காட்டமாக பதில் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணைந்துள்ளது. இதையடுத்து தங்கள் கூட்டணியில் ராமதாஸை இணைக்க பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வந்தன.

விசிக அதிருப்தி
இது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைந்தால் விசிக வெளியேறிவிடும் என்று திருமாவளவன் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. ராமதாஸ் உடன் திமுக பேசி வருவதாக திமுக முன்னாள் எம்.பி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் தான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ராமதாஸ் - திருமாவளவன் இருவரும் நேருக்கு நேராக உட்கார்ந்து பேசினால் போதும், விசிகவின் நிலைப்பாடு நிச்சயம் மாறும் என கூறியிருந்தார். இதற்கு விசிக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
விசிக எம்.எல்.ஏ பதிலடி
விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கூட்டணியில் யார் யார் என்பதை திமுக முடிவெடுக்கும் என்பதைத் தான் நாங்களும் சொல்லி விட்டோமே. சாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை." எனத் தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை பேசியது
முன்னதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, தமிழகத்தில் இண்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. அதை சிதைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை பிரித்து தனிமையாக்கி, அதன் வாக்கு வங்கியை குறைத்து, சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின வாக்குகளை சிதறடித்து தமிழகத்தை பிடித்துவிட வேண்டும் என மதவாத பாஜக கனவு காண்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை குறைக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படுவதும் உண்மையல்ல. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியை கூட குறைக்க மாட்டோம். இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று சொன்னார். அவருடன் மூத்த அமைச்சர்களும் இருந்தனர். தற்போது காலம் போய் கொண்டிருக்கிறது.
பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து தொகுதி பங்கீடு குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். கூட்டணியை வலுப்படுத்த சில புதிய கட்சிகளை கூட்டணிக்குள் சேர்க்க வேண்டும் என்று கூட சொல்லியிருக்கிறோம். அடுத்த ஒரு வாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் எத்தனை என்பது உறுதியாகிவிடும்.
திமுக கூட்டணியில் ராமதாஸ்?
அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக கூட்டணிக்குள் வருவதை திமுக தலைவர் தான் முடிவு செய்யவேண்டும். அவர்தான் கூட்டணிக்கு தலைவர். ராமதாஸும், விசிக தலைவர் திருமாவளவனும் நெருக்கமாக இருந்தவர்கள் தான். இருவருக்கும் இடையே இடைவெளி எல்லாம் இல்லை. அவருக்கு ஒன்று என்றால் இவர் பேசுவார். இவருக்கு ஒன்று என்றால் அவர் பேசுவார்.
விசிக கொடியை ராமதாஸ் ஏற்றியிருக்கிறார். வன்னியர் சங்க கொடியை திருமாவளவன் ஏற்றியிருக்கிறார். இவ்வாறு இணக்கமாக இருந்தவர்கள் தான் இருவரும். எனவே தேவை என்றால் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி சரி செய்து கொள்வார்கள். அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications