திமுக கூட்டணியில் ராமதாஸ் தரப்பு? தொலைபேசியில் நலம் விசாரித்த திருமாவளவன்.. என்ன நடந்தது?
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் உடல் நலம் பெற்று வீடு திரும்பிய நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், அந்தப் பட்டியலில் திருமாவளவனும் இணைந்துள்ளார். இருந்தாலும், திருமாவளவன் திடீரென தொலைபேசி மூலம் அழைத்து பேசி இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் இருதய கோளாறு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மருத்துவர் செங்குட்டுவேல் தலைமையிலான குழுவினர் ஆஞ்சியோ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ராமதாஸ், நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதனிடையே ராமதாஸை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். அன்புமணி மட்டும் நேரில் சந்திக்க முடியவில்லை என்று விளக்கம் கொடுத்தார்.
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசி வாயிலாக அழைத்து உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேம். அவர் முழுமையாக நலம்பெற வேண்டும் என விசிக சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே ராமதாஸ் தரப்பில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் திருமாவளவன் எந்த காலத்திலும் பாமகவுடன் கூட்டணி இல்லை என்று பேசி வந்தார். ஆனால் ராமதாஸ் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. அதேபோல் திமுக தரப்பில் இருந்து திருமாவளவனை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் ராமதாஸை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமாவளவன் பேசி இருக்கிறார். இதனால் திமுக கூட்டணியில் விசிக மற்றும் ராமதாஸ் தரப்பை இணைப்பதற்கான தொடக்கப் புள்ளியாக இந்த விவகாரம் அமைந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திமுக ஆட்சியை விமர்சிப்பதில் இருந்து ராமதாஸ் கடந்த சில மாதங்களாகவே அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications