"தவெகவுக்கு ஆதரவு! ஆனாலும் திமுக கூட்டணியில் தொடர்கிறோம்.." ஒரே வரியில் திருமாவளவன் கொடுத்த ட்விஸ்ட்
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. தவெகவுக்கு விசிக ஆதரவு கொடுத்துள்ள சூழலில், பெரும்பான்மை நம்பரை தவெக+ எட்டியுள்ளது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தவெக ஆதரவு ஏன் என்பதை விளக்கினார். மேலும், இன்னும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலேயே தொடர்வதாகவும் அவர் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிறகும் கூட தவெக ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. காங்கிரஸ், இரு இடதுசாரி கட்சிகள் தவெகவுக்கு ஏற்கனவே ஆதரவு அளித்திருந்தது. இருந்த போதிலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட இரு இடங்கள் குறைவாக இருந்ததால் கடந்த இரு நாட்களாகக் குழப்பம் தொடர்ந்தது.

விசிக
இந்தச் சூழலில் தான் விசிக நேற்று தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக இருந்தது. அது பிறகு இன்று காலை என ஆனது. இதனால் தமிழ்நாடு அரசியலில் டென்ஷன் தொடர்ந்தது. இந்தச் சூழலில் தான் ஒருவழியாக மாலையில் விசிக தனது நிலைப்பாட்டை அறிவித்தது. தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக விசிக அறிவித்துள்ளது.
விசிகவால் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது என்ற நிலை வந்துவிடக்கூடாது என்றும் இதன் காரணமாகவே தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரிப்பது என்ற முடிவை எடுத்துள்ளோம் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். அதேநேரம் இன்னுமே தாங்கள் ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலேயே தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணி தொடரும்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தான் இப்போதும் இருக்கிறோம். ஆனால், அரசியல் நெருக்கடியான இந்த சூழலில், அரசியல் கட்சி என்ற முறையில் எங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்தி இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இது எந்த வகையிலும் எங்கள் (திமுக விசிக) உறவைப் பாதிக்கும் என்று நம்பவில்லை. எங்கள் முடிவு விஜய் முதல்வராக உதவுவது.. ஜனாதிபதி ஆட்சி வராமல் தடுப்பது இந்த இரண்டிற்கும் மட்டும் தான்.
ஸ்டாலின்
இடதுசாரிகளும், விசிகவும் எந்த முடிவை எடுத்தாலும் அதை திமுக தலைமையிடம் சொல்லிவிட்டு, பொதுவெளியில் அறிவிப்போம் என்றே நாங்கள் முடிவெடுத்திருந்தோம். அதன்படி ஸ்டாலினுக்கு இந்த தகவலை நாங்கள் முறைப்படி சொன்னோம். அது உங்கள் கட்சிக்கான சுதந்திரம்.. உங்கள் முடிவுக்கு வாழ்த்துகள் என்று அவர் ஓகே சொன்னார்.
ஸ்டாலினிடம் சொல்லிவிட்டோம்
அவர் தொடக்கம் முதலே விஜய் ஆட்சி அமைக்க நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம் என்றே சொன்னார். அந்த பெருந்தன்மையான கருத்தைத் தான் அவர் தொடக்கம் முதலே சொல்லி வருகிறார். விஜய் ஆட்சி அமைப்பதைத் தாமதப்படுத்தக்கூடாது என்றே ஸ்டாலின் நேற்று கூட அறிக்கை வெளியிட்டிருந்தார். ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுத் தான் எங்கள் நிலைப்பாட்டை அறிவித்தோம்" என்றார்.
விஜய்க்கான ஆதரவு
இப்போது விஜய்யிடம் தவெகவின் 107 எம்எல்ஏக்கள் (விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துவிடுவார் என்பதால் 107), காங்கிரஸின் 5, விசிக, இரு இடதுசாரி கட்சிகள், ஐயூஎம்எல் கட்சிகளின் தலா 2 இடங்கள் உள்ளன. மொத்தம் 120 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இது பெரும்பான்மைக்குத் தேவையான 118ஐ விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications