திருமாவளவன் பேச்சு பற்றி மடக்கி மடக்கி கேட்ட "ஒன்இந்தியா.." வீரபாண்டியன் பதில் என்ன தெரியுமா?
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வெளியே வந்ததற்கு 100 சதவீதம் காரணம் திமுகதான் என திருமாவளவன் சொன்ன கருத்து குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் சொன்ன கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில் பார்க்கலாம்.
கேள்வி: திமுக கூட்டணியில் இருந்து இடதுசாரிகள், காங்கிரஸ் எல்லாரும் போனதுக்கான காரணம் என திருமாவளவன் சொல்கிறாரே அது உண்மையா?
பதில்: திமுகவுடன் நேற்று வரை இருந்தோம். அது ஒரு கொள்கை கூட்டணியாக நாம் உள்வாங்கினோம். சமரசம் இல்லாமல் மத்திய அரசையும் ஆளுநரின் இரட்டை ஆட்சி முறையையும் எதிர்த்தோம். எனவே நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் நெருக்கமாக இருந்தோம்.

எங்களுக்குள் கொள்கை ரீதியில் எந்த பிரச்சினையும் எழும்பவில்லை. இப்போது நாம் கூட்டணியில் இருந்து வெளியே இருக்கிறோம். எனவே திமுகவுடன் கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்த போதே தவறுகளை சுட்டிக் காட்டியிருக்கலாம். ஆனால் அங்கிருந்து வெளியேறிய பிறகு சுட்டிக் காட்டுவது என்பது அத்தனை பொருத்தமாக இருக்காது. இதை அரசியல் அறிந்த, மிகவும் படித்த, நல்லறிஞரும் கூட, எனவே அந்த விஷயங்களை தவிர்த்திருக்கலாம்.
இதையெல்லாம் தவிர்த்துவிட்டு நிறைய ஏராளமான பிரச்சினைகளுக்கு அவர் செல்வார் என்ற நம்பிக்கை உண்டு.
கேள்வி: அண்மைக்காலமாக திருமாவின் பேச்சு அதிலும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சர்ச்சைக்குரியதாகவே இருக்கின்றதே, திமுகவில் இருக்கிறோம் என்கிறார், உறவில் நீடிக்கிறோம் என்றார்.
தேமுதிகவை கடைசி நேரத்தில் கூட்டணியில் அழைத்து வந்து நீண்டகாலமாக கூட்டணியில் இருப்போருக்கு சீட் குறைத்து கொடுத்ததாக பத்திரிகையாளர்கள் கூட விமர்சித்திருந்தோம். அப்போதெல்லாம் திருமா அமைதியாக இருந்து விட்டு இப்போது திமுகவுக்கு எதிராக குரல் கொடுப்பது ஒரு முதிர்ந்த அரசியல் தலைவருக்கு சரியான பக்குவம் ,பண்பு என எடுத்துக் கொள்ள முடியுமா?
பதில்: திருமாவளவன் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவர், பக்குவம் பண்பு கொண்டவர்தான், நீங்கள் ஒரு நேர்காணல் நடத்தினால் அவர் இதுகுறித்த விளக்கத்தை அளிப்பார் என நினைக்கிறேன்.
கேள்வி: அவர் வெறும் விசிகவை மட்டும் சொல்லாமல் கம்யூனிஸ்ட்கள் வெளியேறியதற்கும் திமுகதான் காரணம் என்கிறாரே. அது உண்மையா?
பதில்: தற்போது அதை கடந்து இடைத்தேர்தல் வந்தாகிவிட்டது, தவெக அரசுக்கு ஆதரவு தந்திருக்கிறோம். இந்திய கூட்டணி வலுப்பெற வேண்டும்.
கேள்வி: ஆளும் கட்சி மக்கள் பிரச்சினைகளை பேச விடாமல் கூட்டணி தலைவர் இது போல் பேசுவது மடை மாற்றும் செயல்தானே?
பதில்: உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் கிடப்பில் இருக்கின்றன. அரசு ஊழியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என பலருக்கு பலவிதமான கோரிக்கைகள் உள்ளன. இது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும். பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் இது போன்ற கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இதுதான் நிகழ்கால கடமையாக இருக்க முடியும் என கருதுகிறேன்.
கேள்வி: ஒட்டுமொத்தமாக திருமாவளவனின் பேச்சை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
பதில்: ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் நல்ல சிந்தனையாளர்.
கேள்வி: திருமா ஒரு நல்ல சிந்தனையாளர், அதில் மாற்றுக் கருத்தே இல்லை, ஆனால் திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் வெளியேறியது குறித்து அவர் பேசியிருக்கிறாரே அதை குறித்து கேட்கிறேன்.
பதில்: திருமாவளவன் பேச்சிய பேச்சை கடந்து செல்ல வேண்டும். சில நேரங்களில் வார்த்தைகள் இடறும். சுட்டிக் காட்டும் போது அந்த தவறை அவர் திருத்திக் கொண்டு முன்னேறுகிற பக்குவம் உடையவர். தவறுகளை சுட்டிக் காட்டினால் உடனே திருத்திக் கொள்வார்.
கேள்வி: இடதுசாரிகள் சுட்டிக் காட்டினீர்களா?
பதில்: பலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறோம். தோழமையுடன் நாங்கள் சொல்லும் கருத்துகளை ஏற்றிருக்கிறார். அவர் ஜனநாயகவாதி!
கேள்வி: திமுக கூட்டணி குறித்து அவர் பேசிய பேச்சு குறித்து கம்யூனிஸ்ட் சுட்டி காட்டியதா?
பதில்: ஒவ்வொரு வார்த்தைகள் மீது சவாரி செய்ய முடியாது, ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுங்கன்னு கேட்க முடியாது.
கேள்வி: திருமாவளவன் பேசிய பேச்சுக்கள் குறித்து ஏதேனும் அவரிடம் பேசினீர்களா?
பதில் : இல்லை சந்தர்ப்பம் அமையவில்லை. நான் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது என்னை பார்க்க வந்தார், அத்துடன் சரி, அவருடன் எப்போது பேசினாலும் உழைக்கும் மக்கள் நலன் குறித்துதான் பேசுவார்
இவ்வாறு திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் வெளியே வந்ததற்கு காரணம் திமுக என திருமாவளவன் சொன்ன கருத்து குறித்து ஒன் இந்தியா மடக்கி மடக்கி கேட்டும் வீரபாண்டியன் நேரடியாக ஆம், இல்லை என பதில் அளிக்கவில்லை.
தருமபுரியில் நடந்த விசிக நிர்வாகி வீட்டு திருமண விழாவில் திருமாவளவன் பேசுகையில், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறதற்கு திமுகதான் முழு பொறுப்பு. கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம், திமுகவின் அணுகுமுறை குறித்து விவாதிக்க வேண்டும்.
தவெகவை குறைத்து மதிப்பிட்டது திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறைதான் திமுக கூட்டணி தோல்விக்கு காரணம். கூட்டணி கட்சிகளை ஏன் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக அனுமதிக்கவில்லை? திமுக கூட்டணி உடைந்து விடக் கூடாது என போராடினோம். ஆனால் கூட்டணியை காப்பாற்றிக் கொள்ள திமுக முயற்சி எடுக்கவில்லை.
திடீரென தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்ததால் பிற கட்சிகளுக்கு வருத்தம் ஏற்பட்டது. திமுக- காங்கிரஸ் கூட்டணியில் நல்லிணக்கம் இல்லை, மதிமுகவை திமுக சின்னத்தில் நிற்க வைத்தார்கள். அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருக்காதா?
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஏன் வழங்கவில்லை? புதிதாக ஒரு கட்சியை கொண்டு வந்து கூடுதலாக சீட் கொடுத்ததால் பிரச்சினை ஏற்பட்டது. கூடவே இருந்த கட்சிகளை விட்டுவிட்டு புதிதாக வந்த கட்சிக்கு இத்தனை சீட்டுகளை அள்ளிக் கொடுத்தால் யாருக்குத்தான் வருத்தம் இருக்காது என திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்தார்.


Click it and Unblock the Notifications
