Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன?
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் முன்பாக இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் குறித்து பார்க்கலாம். ஏற்கனவே பாஜகவுடன் கைகோர்க்க மாட்டேன் என்று அறிவித்துவிட்ட சூழலில், அவர் விஜய்யுடன் கைகோர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். 2019 லோக் சபா தேர்தல் தொடங்கி 2021 சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 லோக்சபா தேர்தல்களில் திமுக கூட்டணியில் தவாக அங்கம் வகித்தது. இதில் 2021 சட்டசபைத் தேர்தலில் தவாகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

அதில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட வேல்முருகன், சுமார் 4,600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை திமுக கூட்டணியில் இருந்த தவாக, கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்தது. அதுமட்டுமல்லாமல் நெய்வேலி தொகுதியில் போட்டியிட வேல்முருகன் காய் நகர்த்தி வந்தார். ஆனால் திமுக தரப்பில் ஒரேயொரு தொகுதி மட்டும் அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாகவே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை வேல்முருகன் எடுத்ததாக தெரிகிறது. இருப்பினும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவினை கடந்த ஜனவரி மாதமே வேல்முருகன் எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஈரோடு மாவட்டத்திற்கு புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்ற வேல்முருகனுடன் விமானத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின் தவகா நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக சுமார் 4 நாட்கள் வேல்முருகன் ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்போது முதலே வேல்முருகன் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வந்தார்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவினை வேல்முருகன் எடுத்திருப்பது தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என்பதையும் வேல்முருகன் நேரடியாக அறிவித்துள்ளார். இதனால் வேல்முருகனின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதன் காரணமாக வேல்முருகன் முன் நிற்கும் வாய்ப்புகளாக விஜய் மற்றும் ராமதாஸ் - சசிகலா தரப்பு மட்டுமே இருக்கிறது. ஏற்கனவே விஜய்யை கடுமையாக சாடி வரும் வேல்முருகன், அவரை விமர்சித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். இதனால் மீண்டும் ராமதாஸ் தரப்புடன் வேல்முருகன் கைகோர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications