டெல்லிக்கு தமிழ்நாடு அரசு துணைபோகிறதா? கோயில் அறிவிப்புகளில் இந்தி நுழைந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் தங்களது செல்போன்களை ஒப்படைக்கும் பாதுகாப்பு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில், தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது" என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறுகையில், "தமிழ்நாடு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தமிழ் ஆங்கில இருமொழிக் கொள்கைக்கு மாறாக, தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் திருக்கோயில்களில் இந்திக்கு இடமளிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

Velmurugan Questions TN Govt Over Hindi Announcements in Temples Alleging Central Imposition

தமிழ் வெறும் ஒரு மொழியல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்து வாழும் ஒரு பேரினத்தின் பண்பாட்டு அடையாளம். பண்பாடு, கலை, இலக்கியம், இலக்கணம், அறிவு, வாழ்வியல் என உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் தனிச்சிறப்புடன் திகழ்கிறது தமிழ்.
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தாய்மொழி இருக்கிறது. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகத் தமிழைப் போற்றும் பெருமிதம் தமிழுக்கு உண்டு. அத்தகைய பெருமைமிக்க மொழி பிறந்த மண்ணில், அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறிவிப்புப் பலகைகளில் தமிழுக்கு இணையாக இந்தி கொண்டுவரப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப்போராட்டங்களில் தாளமுத்து, நடராசன், கீழப்பழுவூர் சின்னசாமி உள்ளிட்ட எண்ணற்ற மொழிப்போர்த் தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். அவர்களின் தியாகத்தால் பாதுகாக்கப்பட்ட மொழி உரிமையை நாம் ஒருபோதும் அலட்சியப்படுத்த முடியாது.

எனவே, கோயில்களின் அறிவிப்புப் பலகைகளில் தமிழுக்கே முதலிடம், ஆங்கிலத்திற்கு இரண்டாவது இடம் என்ற நடைமுறை உறுதியாகப் பின்பற்றப்பட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இடம்பெறும் பெயர்ப்பலகைகளில் தமிழ் ஆங்கிலம் 5:3 என்ற விகிதத்திலும், பிற மொழிகள் இடம்பெற்றால் தமிழ் ஆங்கிலம் பிறமொழி 5:3:2 என்ற விகிதத்திலும் அமைக்க வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே பெயர்ப்பலகைகளுக்கான விதிகளில் உள்ளது.

ஆகவே, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்துத் கோயில்களிலும் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளை உடனடியாக ஆய்வு செய்து, தமிழுக்கு உரிய முதன்மை இல்லாத பலகைகள், தமிழினைச் சிறிய எழுத்தில் காட்டும் பலகைகள், தேவையற்ற வகையில் இந்திக்கு முன்னுரிமை அளிக்கும் பலகைகள் அனைத்தையும் உடனடியாக அகற்றி மாற்ற வேண்டும்.

அதேபோன்று, தமிழ்நாடு முழுவதும் தமிழே இல்லாமல் பிறமொழிகளில் மட்டும் பெயர்ப்பலகைகள் வைத்துள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து, விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழை மேடைகளில் புகழ்வது மட்டும் போதாது. தமிழ்நாட்டின் நிர்வாக நடைமுறைகளில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். மொழிப்போர்த் தியாகிகளின் தியாகத்தையும், தமிழின் தொன்மையையும், பண்பாட்டுப் பெருமையையும், கலை இலக்கிய வளத்தையும் கருத்தில் கொண்டு, திருக்கோயில்கள் உள்ளிட்ட அரசின் அனைத்து நிர்வாகத் தளங்களிலும் தமிழுக்கு உரிய முதன்மையை நிலைநாட்டவும், இந்தி இடம்பெற்றுள்ள தேவையற்ற அறிவிப்புப் பலகைகளை அகற்றவும் தமிழ்நாடு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+