வேல்முருகன் 72 மணி நேர கெடு யாருக்கு லாபம்? தவெக பிளான் B.. திமுகவுக்கு வாழ்வுரிமை கட்சியால் லாஸ்?
சென்னை: தேர்தல் தேதியும் அறிவித்தாகிவிட்டது.. இந்த நேரத்தில் திமுக கூட்டணியில் சலசலப்புகள் வெடித்து கிளம்பி உள்ளன.. குறிப்பாக, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள கெடு, அவரது செய்தியாளர் சந்திப்பு, திமுகவுக்கு ஒரு புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. அப்படியானால் வேல்முருகன் எடுக்கும் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன? அவர் முன் உள்ள சாய்ஸ்கள் என்ன? வாழ்வுரிமை கட்சியை திமுக கூட்டணி இழக்குமா? அப்படி இழந்தால் திமுகவுக்கான பாதிப்புகள் என்ன?
தவெக தலைவர் வேல்முருகன் இப்போது ஒரு செக்-மேட் பாணியிலான அரசியலை முன்னெடுத்து வருகிறார்.. திமுக தரப்பில் தொகுதி பங்கீட்டில் போதிய இடங்கள் ஒதுக்கப்படாதது மற்றும் கொள்கை ரீதியான 10 கோரிக்கைகளுக்கு அதாவது சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு, ஈழத் தமிழர் விடுதலை போன்றவைகளுக்கு முறையான பதில் கிடைக்காதது அவரை அதிருப்தியின் விளிம்பிற்கே தள்ளிவிட்டது போலும்..

வேல்முருகன் 72 மணி நேர கெடு
ஒருவேளை அவர் திமுக கூட்டணியிலிருந்து விலக போகிறாரா தெரியவில்லை.. அப்படி விலகும் சூழல் ஏற்பட்டால் அவர் முன் உள்ள முதல் ஆப்ஷன், 234 தொகுதிகளிலும் வாழ்வுரிமை கட்சி தனித்துப் போட்டியிடுவது.. இதற்காக ஏற்கனவே 1,200-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை அவர் பெற்றுள்ளார்..
இரண்டாவது ஆப்ஷன், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைவது.. பாஜக இல்லாத அதிமுக கூட்டணியை அவர் கொள்கை அளவில் ஏற்பதாக சூசகமாகவும் தெரிவித்துள்ளார்.. தனது கட்சியின் தமிழ் தேசிய அடையாளத்தைச் சிதைக்காமல் இருக்க, சீட்டுகளை விட கொள்கைகளுக்கே முன்னுரிமை என்ற பிம்பத்தையும் விடாமல் கட்டமைத்து வருகிறார் வேல்முருகன்.
திமுகவுக்கு பாதிப்புகள் வருமா?
திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறினால், அது வட மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கியில் சிறு விரிசலை ஏற்படுத்தும்.. குறிப்பாக கடலூர், விழுப்புரம், அரியலூர் போன்ற வன்னியர் சமூகத்தினர் செறிந்து வாழும் பகுதிகளில் வேல்முருகனுக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் அவரது கட்சியின் தீவிர தொண்டர் படை திமுகவுக்குக் கிடைக்காமல் போகும்..
பாமக ஏற்கனவே ஒரு பக்கம் பலமாக இருக்கும் நிலையில், வேல்முருகனையும் இழப்பது திமுகவின் சமூக நீதி வாக்கு வங்கியில் ஒரு வெற்றிடத்தையே உருவாக்கும்.. அதுமட்டுமல்ல, சிறு கட்சிகளை தக்கவைக்க தவறியது என்ற எதிர்மறை விமர்சனம் திமுக தலைமை மீது நிச்சயம் படியும்.. இது மற்ற சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு தயக்கத்தை ஏற்படுத்தக்கூடும்..
மாற்று அணிக்கு லாபமா?
ஒருவேளை வேல்முருகன் அதிமுக கூட்டணிக்கு சென்றால், அது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.. வட மாவட்டங்களில் பாமகவின் இடத்தை ஓரளவு ஈடுகட்ட வேல்முருகன் உதவுவார்.. குறிப்பாக, வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அரசு காட்டும் சுணக்கத்தை அதிமுக தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேல்முருகன் ஒரு சிறந்த கருவியாக இருப்பார்.. இது அதிமுகவின் வாக்கு சதவீதத்தை வட தமிழகத்தில் கணிசமாக உயர்த்த உதவும்..
அரசியல் கணிப்பு
இப்போதைய சூழலில், வேல்முருகன் திமுகவை மிரட்டி பணிய வைக்கும் உத்தியை கையாய்வதாகவே தெரிகிறது.. எனினும், திமுக இறங்கி வராத பட்சத்தில், அவர் தனித்து போட்டி என்பதை விட அதிமுக கூட்டணியையே இறுதி முடிவாக எடுக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது..
ஏனெனில் தனித்து போட்டியிடுவது கட்சியின் நிதி மற்றும் தேர்தல் பலத்தை வீணடிக்கும் என்பதை வேல்முருகன் நன்றாகவே அறிவார்.. பாஜக கூட்டணியை அவர் திட்டவட்டமாக மறுப்பதால், அதிமுக தலைமையிலான மாற்று அணி உருவாக வேல்முருகன் ஒரு முக்கிய அச்சாணியாக இருப்பார்.. அதேசமயம் திமுக அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. எனவே திமுக என்ன முடிவெடுக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications