வெங்கட் நாராயணா டூ அர்ச்சனா கல்பாத்தி வரை.. தொடர்ந்து விமர்சனமாகும் சிஎம் விஜய்யின் நியமனங்கள்
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பரம்பரை முறைப்படி சாரா அறங்காவலர்களின் நியமிக்கும் நடைமுறையை சீரமைக்க மாநில அளவில் அமைக்கப்பட்ட குழுவில் விஜய்யின் பிகில் பட தயாரிப்பாளரும், திரிஷாவின் நெருங்கிய தோழியுமான அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றுள்ளார். இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏற்கனவே வெங்கட நாராயாணா நியமனம் சர்ச்சையான நிலையில், விஜய்யின் இந்த செயல் சர்ச்சையை கிளப்புவதாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக விஜய் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதே நேரத்தில், முக்கியமான பதவிகளுக்கு திரைத்துறையில் தனக்கு நெருக்கமானவர்களை நியமனம் செய்யும் விஜய்யின் செயல் தொடர்ந்து சர்ச்சையை கிளப்புவதாக அமைந்துள்ளது.

ரத்தன் பண்டிட், வெங்கட நாராயாணா
விஜய் பதவியேற்ற சில நாட்களில் தனது ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட்க்கு ஆலோசகர் பதவி அளித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, அவரது நியமனத்தை விஜய் ரத்து செய்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவரும் ஜனநாயகன் பட தயாரிப்பாளருமான வெங்கட நாராயாணாவை நியமனம் செய்தார்.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி பிரச்சினை நிலவி வரும் சூழலில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்வதா? என்று பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும், இதற்கு எந்த வித பதிலும் விஜய் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், வெங்கட நாராயண நியமனத்தில் எந்த வித விதி மீறலும் இல்லை என்று கூறியிருந்தார்.
விஜய்யின் பிகில் பட தயாரிப்பாளர்
இந்த நிலையில்தான் தற்போது விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்திக்கு அறங்காவலர் தேர்வு குழுவில் தவெக அரசு இடம் அளித்து இருப்பது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பரம்பரை முறைப்படி சாரா அறங்காவலர்களின் நியமிக்கும் நடைமுறையை சீரமைக்க மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் தான் அர்ச்சனா கல்பாத்தியும் ஒரு உறுப்பினராக இருக்கிறார்.
அதேபோல உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பா.ரா சம்பத், சொற்பொழிவாளர் மா. சுமதி, டாக்டர் த வேல்முருகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழு தலைவராக பொம்மபுரம் ஆதீனம் சிவ ஞானபாலய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் கே ராமநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நடிகை திரிஷாவின் நெருங்கிய தோழியாகவும் பட தயாரிப்பாளராகவும் அறியப்படும் அர்ச்சனா கல்பாத்தி, கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.
சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம்
அறங்காவலர் குழுவுக்கு அர்ச்சனாவுக்கும் என்ன தொடர்பு, இந்த பதவியில் நியமனம் செய்ய தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லையா? என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார்கள். அர்ச்சனா கல்பாத்தி என்ன ஆன்மீகவாதியா? அல்லது கோயில் தொடர்பான ஆய்வுகள் ஏதேனும் செய்து இருக்கிறா? என்று கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
