"இடி மின்னலுடன் மழை!" தமிழ்நாட்டில் இன்று மழை இருக்கு.. சென்னையில் என்ன கிளைமேட் இருக்கும்?
சென்னை: நாட்டின் மற்ற பகுதிகளைப் போலத் தமிழ்நாட்டில் இன்று பருவமழை தீவிரமடையாத நிலையில், இன்று வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் வெப்பம் எந்தளவுக்குச் செல்லும் என வானிலை மையம் கூறியுள்ளது என்பதையும் பார்க்கலாம்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. டெல்லி, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள் மட்டுமின்றி தெலுங்கானாவிலும் கூட கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டி வருகிறது.
இப்படி நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்த போதிலும் தமிழ்நாட்டில் பெரியளவில் மழை பெய்யவில்லை. ஆங்காங்கே மழை பெய்தாலும் கூட மாநிலம் முழுக்க மழை இன்னுமே ஆரம்பிக்கவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 29) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நாளை (ஜூலை 30) முதல் வரும் ஆகஸ்ட் 3 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: இன்றைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் வரும் 30ஆம் தேதி வரை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் இன்றைய தினம் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.
அரபிக் கடல் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை: கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications