நல்லகண்ணுவுக்கு நுரையீரல் தொற்று.. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லகண்ணுவுக்கு வயது மூப்பு காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கடந்த 22 ஆம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர். மேலும், 100 வயதான நல்லகண்ணுவுக்கு வயது மூப்பு காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்காக நரம்பியல், நுரையீரல், இதய மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
நேற்று மாலை அவரது உடல்நிலை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று இரவு நல்லகண்ணு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.











Click it and Unblock the Notifications