“வெற்றி சேனல் பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்”.. போலீசில் புகார் அளித்த நிர்வாகிகள்!
சென்னை: வெற்றி சேனல் நிர்வாகிகள் இன்று சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தங்களைப் பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தவெக ஆதரவு தொலைக்காட்சி சேனல் ஒன்று உருவாகியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் தொடங்கப்பட்டு, விரைவில் சாட்டிலைட் சேனலாக லாஞ்ச் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேனலை, தவெகவைச் சேர்ந்த சில தொழிலதிபர்கள் இணைந்து தொடங்கியுள்ளனர்.

கடந்த 20 ஆம் தேதி சென்னையில் வெற்றி சேனல் லோகோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்கள்., சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்டோர் பங்கேற்காமல் சேனல் லோகோ வெளியீட்டு விழா நடைபெற்றது. 'வெற்றி' என்ற பெயரில் இன்னொரு சேனல் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக முதல்வர் அலுவலகத்துக்கு புகார் சென்றதன் காரணமாகவே அமைச்சர்கள் யாரும் லோகோ வெளியீட்டில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், வெற்றி சேனல் தலைவர் விஜயதாரணி, நிர்வாக இயக்குநர் சிங்கார வடிவேலன் ஆகியோர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய வெற்றி சேனல் நிர்வாக இயக்குநர் சிங்கார வடிவேலன், "நான் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. நான் தமிழ்நாடு கவர்மெண்ட் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்கு கப்பல் வாடகைக்கு ஓட்டிக்கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் அப்போது அமைச்சராக இருந்த எ.வ.வேலு என்னிடம் 5% பார்ட்டி ஃபண்ட் கேட்டார். அதை நான் தர முடியாது எனச் சொல்லி அப்போதே அவர்களுக்கு இ-மெயில் அனுப்பினேன். பின்னர் உதயநிதி அலுவலகத்திற்குப் போய் நான் புகார் அளித்தேன்.
அதனால், விமலை கைவசமாக வைத்து என் மீது வழக்கு போட்டார்கள். கடந்த ஆண்டு கூட திமுக ஆட்சியில் இருக்கும்போதே நான் இந்த ஒரு விஷயத்துக்காக நான் பழிவாங்கப்பட்டு இருக்கேன் என பேட்டிகளில் சொன்னேன். அது முழுக்க முழுக்க பொய்யான, ஜோடிக்கப்பட்ட வழக்கு. அதை நீதிமன்ற உத்தரவின் பேரில் முறையான ஒரு காவல் அதிகாரி விசாரித்து, பொய்யான புகார் என்று அவர்களே நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அந்த வழக்கை அவர்களே வாபஸ் பெற்றுக்கொண்டார்கள். என் மீது எந்த ஒரு குற்றவழக்கும் இல்லை.
இவர்கள் யூடியூபில் சொல்வது போல நான் யாரையாவது மோசடி பண்ணியிருந்தால், எந்த ஆதாரத்தையும் அவர்கள் வெளியிடலாம். அதை நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். அவர்கள் என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கணும். என் மேல எந்த குற்றமும் கிடையாது.
நாங்ள் தலைவர் விஜய் மீது வைத்துள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், பாசத்தின் அடிப்படையிலும், நாங்கள் நான்கு நண்பர்கள் இணைந்து வெற்றி சேனலை நல்லபடியாக கொண்டு வர நினைக்கிறோம். அதை தடுக்கும் விதமாக இவர்களே திமுகவோட பின்னணியில் தூண்டிவிட்டு, எங்களுடைய வெற்றிங்கிற பேர்ல லோகோ ரிஜிஸ்டர் செய்ய வைத்துள்ளனர்.
நாங்கள் மே மாதம் 22/5/2026 பதிவு பண்றோம். அவங்க 18/6/2026-ல வெற்றினு பதிவு பண்ணிக்கிட்டு, 'இந்த சேனல் எங்களுக்கு சொந்தமானது. இதை நீங்க வந்து வெளியிடக்கூடாது. அமைச்சர்களை போக வைக்கக்கூடாது'ன்னு நேற்று முதல்வரிடம் புகார் அளித்து, எங்களுடைய நிகழ்ச்சியை நடத்த விடாம பண்றதுக்கு ஆயிரம் முட்டுக்கட்டைகள் போட்டாங்க.
இருந்தாலும் அமைச்சர்கள் வந்து அவங்களோட பணிச்சுமை காரணம், நேற்றைக்கு மத்திய உள்துறை அமைச்சர்லாம் வந்ததுனால நிறைய அமைச்சர்கள், சீனியர் அமைச்சர்கள் வர முடியாமல், 'நீங்க நிகழ்ச்சி நடத்திருங்க. சேனலை லான்ச் பண்ணும்போது சிறப்பா பண்ணிக்கலாம். இது ஒன்லி லோகோ லான்ச் தான'னு சொன்னதுனால நாங்களே வெளியிட்டுட்டோம்.
நாங்க அனைவரிடமும் உரிய அனுமதி வாங்கி, அவர்களை சந்தித்து, அவர்களுடைய ஆலோசனையைப் பெற்றுத்தான் விழாவுக்கு திட்டமிட்டோம். தவெக பொதுச்செயலாளரிடம் அனுமதி வாங்கி, அவர் சொன்னதன் பேரில் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து நாங்க முறையா பர்மிஷன் வாங்கி செஞ்சோம். ஆனா அவங்களால கலந்துகிட முடியல. சேனல் லான்ச் அப்போ நிச்சயமாக வரோம்னு சொல்லிருக்காங்க.
ஆனா நிலைமை இப்படி இருக்க, நாங்களே ஏதோ அமைச்சர்கள் பெயரை பிரசுரித்து, அதன் மூலமா ஏதோ நாங்க வந்து பணம் வசூல் பண்ணப்போறதா அவர்கள் கட்டுக்கதையை அந்த யூடியூப்ல கட்டுறாங்க. இதற்கு நாங்க உரிய நடவடிக்கை எடுப்போம். காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சொல்லி காவல் ஆணையரிடம் மனு கொடுத்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
