"காப்பாத்துங்க!" சென்னை விஜிபியில் இருந்து வந்த அலறல் சப்தம்! டாப் கன் ராட்டினத்தில் நடந்தது என்ன?
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதில் 3 மணி நேரமாக சிக்கி அந்தரத்தில் தொங்கியவர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட நிலையில் நடந்தது என்ன என்பது குறித்து விஜிபி யுனிவர்சல் கிங்டம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜிபி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்ட விளக்கத்தில் Top Gun எனும் ராட்டினத்தை இயக்கிய போது மோட்டாரில் சப்தம் வந்ததால் உடனே ராட்டினம் நிறுத்தப்பட்டது. ராட்டினத்தில் சிக்கியோரை மீட்க எங்களிடம் இருந்த கிரேன் மூலம் முயற்சி செய்தோம். உயரம் போதாததால் தீயணைப்பு துறையினரை வரவழைத்து மீட்புப் பணி நடைபெற்றது. ராட்டினத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள விஜிபி யுனிவர்சல் கிங்டம் மற்றும் மரைன் வேல்ர்டு. மரைன் கிங்டமில் பெரியவர்களுக்கு ரூ 745 , சிறியவர்களுக்கு 645 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது போல் யூனிவர்சல் கிங்டமில் பெரியவர்களுக்கு ரூ 350 , சிறியவர்களுக்கு ரூ 300 வசூலிக்கப்படுகிறது.
மரைன் கிங்டமில் கடலுக்கு அடியில் சென்று பார்த்தால் அங்கு வாழும் உயிரினங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். அது போல் நிறைய வாட்டர் கேம்களும் உள்ளன. யூனிவர்சல் கிங்டமில்தான் ராட்டினம், ரோலர் கோஸ்டர், கண்ணாடி வீடு, பேய் வீடு உள்ளிட்ட சாகச விளையாட்டுகள் உள்ளன.
இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வருகை தந்து சாகச விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அந்த வகையில் நேற்று பொழுதுபோக்கு பூங்காவுக்கு வந்த நூற்றுக்கணக்கானோரில் 30 -க்கும் மேற்பட்டோர் டாப் கன் எனும் ராட்டினத்தில் ரைடு சென்றனர்.
அப்போது ராட்டினத்தை இயக்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அதில் பயணம் செய்த பயணிகள் அப்படியே அந்தரத்தில் தொங்கினர். உடனே ராட்டினத்தில் சிக்கியவர்களை மீட்க விஜிபி பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் முயற்சித்தது.
அவர்கள் பயன்படுத்திய கிரேன் இயந்திரத்தின் உயரம் குறைவாக இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ராட்டினத்தில் உள்ள குழந்தைகள், பெண்களை மீட்டனர். முதலில் 30 பேர் மீட்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் அனைவருமே மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் இயந்திர கோளாறு கொண்ட ராட்டினத்தை எப்படி இயக்கினீர்கள் என கேட்டு ராட்டினத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர். ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்திருந்தால் என்ன ஆவது என்றும் கேட்டனர். கோடைக் காலம் என்பதால் இது போன்ற ஆபத்தான ராட்டினங்களில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.












Click it and Unblock the Notifications