பரபரப்பு.. ரிலீசாகப்போகும் "அந்த வீடியோ.." மக்கள் பார்த்தால் "திமுக காலி.." அமைச்சர் திகுதிகு தகவல்
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. நாளுக்கு நாள் தேர்தல் ஜுரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சிகளை தங்கள் பிரச்சாரத்தின்போது விளாசித் தள்ளி கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக தேர்தல் சர்வேக்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. எனவே, எப்படியாவது முன்னிலை பெற்று விட வேண்டும் என்பதில் ஒவ்வொரு ஆயுதத்தை எடுத்து வெளியிட ஆரம்பித்துள்ளன கட்சிகள்.
எதிர்கட்சிகளை வாயை மூட வைப்பதற்கு, வீடியோ ஆதாரம் ஒரு முக்கியமான விஷயமாக தமிழக அரசியலில் மாறிவிட்டது.

அப்பல்லோ ஆதாரம்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோ ஆர் கே நகரில் இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக மீடியாக்களில் வெளியானது. அப்போது உயிரோடு இருந்த வெற்றிவேல் அதாவது, தினகரன் ஆதரவாளர் தரப்பால் வெளியிடப்பட்டது. ஆர்கே நகரில் தினகரன் செல்வாக்கை உயர்த்துவதற்கு இந்த வீடியோ பயன்படும் என்று நினைத்தது வெற்றிவேல் தரப்பு. அந்த தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது வரலாறு.

திமுக வீடியோ
இப்போதும் அப்படித்தான் ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு. இந்த வீடியோ திமுக பற்றியது. இந்த வீடியோவை பார்த்தால் திமுகவின் பதவி வெறி எப்படிப்பட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார் கடம்பூர் ராஜு.

பதவி வெறி
அது என்ன வீடியோ.. இதோ கடம்பூர் ராஜு கூறியதை நீங்களே பாருங்கள்: ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிச்சாமி அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நாளன்று சட்டசபைக்குள் பெரும் ரகளை நடந்தது. அந்த வீடியோக்கள் முழுமையாக இன்னும் வெளியாகவில்லை. அந்த வீடியோக்களை வெளியிட்டால் திமுகவின் பதவி வெறியை மக்கள் புரிந்து கொள்வார்கள். விரைவில் அந்த வீடியோ வெளியிடப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவைக்குள் அமளி
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது அதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும்.. எம்எல்ஏக்கள் வெளிப்படையாக வாக்களிக்க கூடாது என்று கோரிக்கை வைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இதை சபாநாயகர் ஏற்க மறுத்தபோது, அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் தனபால் இருக்கையில் திமுக எம்எல்ஏக்கள் சிலர் ஏறி உட்கார்ந்து கொண்டனர். சட்டை கிழிந்த நிலையில் ஸ்டாலின் அவை காவலர்களால் வெளியே தூக்கி வரப்பட்டார். அப்போது நடந்த சம்பவங்களின் வீடியோவைதான் இப்போது வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார், கடம்பூர் ராஜு.

20 ரூபாய் டோக்கன்
மேலும், தான் போட்டியிட உள்ள கோவில்பட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள கடம்பூர் ராஜூ, 20 ரூபாயை டோக்கனாக வைத்துக்கொள்ளுங்கள் என்று வாக்காளர்களிடம் கொடுத்து விட்டு வாக்குகளை பெற்றவர் தினகரன். அந்தப்பக்கம் அவரால் திரும்ப போக முடியாது. தொகுதி வாக்காளர்கள் அவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் கோவில்பட்டியில் அவர் போட்டியிட வந்துள்ளார், என்று தெரிவித்தார் கடம்பூர் ராஜு.












Click it and Unblock the Notifications