"அட்ராசிட்டியில்" விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள்.. அமைதியாக கடந்துபோகும் திருமாவளவன்!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் அத்துமீறல் அதிகரித்து வரும் நிலையில், விஜய் அரசு இதுவரை தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குமுறல்கள் பொதுமக்களிடையே கேட்கத் தொடங்கியுள்ளன.
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, பல இடங்களில், அனுமதியின்றி பேனர் வைத்திருந்தனர் அக்கட்சி தொண்டர்கள். அதில் தஞ்சையும் ஒன்று. இதை காவல்துறை அகற்றியது. "தார்மீக சீற்றம்" கொண்டு ரோட்டில் உட்கார்ந்தனர் சிறுத்தைகள். அவர்களை கைது செய்து காவல்துறை வேனில் ஏற்ற வேண்டிய போலீசாரோ, "வேலைக்கு போக வேண்டும் வழிவிடுங்கள்.." என கூறிய, நம்மைபோன்ற சாமானிய பொதுஜனத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரை அடித்து, கழுத்தை பிடித்து போலீஸ் ஜீப்புக்குள் திணித்து, 6 வழக்குகளை அவர் மீது பாய்ச்சியுள்ளது.

"பைக் போக வழிவிடுங்கள்.." என கேட்டு கேட்டு சலித்துப்போய் சத்தம்போட்ட ஆகாஷை அறைந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர், மீது இதுவரை விஜய் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டப் பகலில் இத்தனை கேமராக்கள் முன்னிலையில் சம்பவம் நடந்தபோதிலும் 6 வழக்குகளை வாலிபர் ஆகாஷ் மீது மட்டும் பதிந்துள்ளது முதல்வர் விஜய் கையிலுள்ள காவல்துறை.
இதற்கு அந்த போலீஸ் ஒரு பக்கம் காரணம் என்றால், மூல காரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான். பொதுமக்களை நிம்மதியாக வேலைக்கு கூட போகவிடாமல் அராஜகம் செய்த அவர்கள் அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
ஆம்.. பேனர் வைத்த பிறகுதான் அந்த இடத்தைவிட்டு அகன்றனர். சட்டவிரோதமாக பேனர் வைத்துதான் திருமாவளவனுக்கு மரியாதை செய்ய வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது இந்த சம்பவம்.
தஞ்சையில் திமிறிய சிறுத்தைகள், உளுந்தூர்பேட்டையில் சீறிவிட்டனர். திருமாவளவனுக்கே உயிர் பயத்தை காட்டிவிட்டனர். எவ்வளவு சொன்னாலும் முந்தியடிப்பது.., மேடையில் ஏறுவது, என விசிக தொண்டர்கள் செய்த சேட்டைகளால், மூச்சு முட்டி தண்ணீர் குடித்தார் திருமாவளவன். தப்பித்ததே புண்ணியம் என்று பெருமூச்சுவிட்டார்.
தனது கட்சியினரை கட்டுப்படுத்த, ஒரு தலைவராக தொடர்ந்து தவறிவருகிறார் திருமாவளவன். கடந்த ஆண்டு, திமுக ஆட்சியின்போது, அக்டோபர் 7ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றம் அருகில் விசிக தலைவர் திருமாவளவன் கார் மீது ஒரு ஸ்கூட்டர் லேசாக உரசியது. அதற்காக அந்த ஸ்கூட்டரில் வந்த வக்கீல் ராஜிவ் காந்தி என்பவரை, பார் கவுன்சிலுக்குள் வரை விரட்டிச் சென்று அடித்தனர் திருமாவுடன் வந்த தொண்டர்கள்.
அந்த சம்பவம் நடக்கும்போது காருக்குள்ளேயே இருந்து கொண்ட திருமா வெளியே வந்து, "பாவம் விட்டுவிடுங்கள்.." என கூறவில்லை. அதைக் கூட பாதுகாப்பு காரணம் எனக் கூறி சமாளித்தாலும், அதற்கு பிறகு மேடை நிகழ்ச்சியொன்றில் பேசிய திருமாவளவன், "விசிகவினர், லேசாக தட்டினார்கள், சரியாக கூட அடிக்கவில்லை" என தனது தொண்டர்களின் அடாவடியை, ரசனையோடு கவிதை மாதிரி சொல்லி சிலாகித்தார்.
சரியாக அடிக்கவில்லை என்று திருமா சொல்கிறார், லேசாக பலப்பிரயோகம் செய்தோம், என்று ஆகாஷ் விஷயத்தில் காவல்துறை, அறிக்கைவிட்டுள்ளது. ஆனால் வன்முறையை ஆதரிக்கும் இதுபோன்ற விஷயங்கள் பின்னால் விசிக தொண்டர்கள் இருப்பதுதான் வேதனை.
"அடங்க மறு அத்துமீறு" என்பதை திருமா சொன்னது என்னவோ வேறு அர்த்தத்தில், ஆனால் தப்பாக புரிந்து கொண்டவர்கள் சட்டத்திற்கே அடங்க மறுக்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. அதை கண்டித்து திருமாவும் ஒழுங்குபடுத்த தவறிய விளைவை உளுந்தூர்பேட்டையில் அவரே கண்கூடாக பார்த்து அனுபவித்துவிட்டார். இது முதல்முறை அல்ல, திருமா கூட்டங்களில் இதுதான் வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
