முதல்வர் அலுவலகம் மாற்றம்.. ரூ.6.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு.. வெளியான ஆர்டிஐ தகவல்!
சென்னை: முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடிக்கு மாற்றும் பணிக்காக ரூ.6.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. ஆனால் டெண்டர் எடுத்த ராசி பில்டர்ஸ் நிறுவனம் அரசு மதிப்பீட்டை விட 32% குறைவாக ரூ.3.78 கோடிக்கு டெண்டர் எடுத்திருக்கிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் வேக வேகமாக நடந்து வருகின்றன. முதல்வர் விஜய் கடல் பார்த்து உயர்ந்த இடமான 10வது மாடியில் இருக்க வேண்டும் என்று அவரின் ஆஸ்தான ஜோசியர் ரிக்கி ராதன் பண்டிட் அறிவுறுத்தியதால், இந்த மாற்றம் நடப்பதாக சொல்லப்படுகிறது.

ஜூலை மாத இறுதியிலேயே நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால் எந்தவித டெண்டரும் வெளியிடப்படாமல் நாமக்கல் கவிஞர் மாளிகை புதுப்பிப்பு பணிகள் நடப்பது எப்படி என்ற கேள்வி எழுந்தன. இதுதொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்து வரும் பணிகளின் புகைப்படங்களும் வெளியாகின.
அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மறுப்பு தெரிவித்தார். இதன்பின் டெண்டர் பணிகள் நடைபெற்றது. 3 மாதங்களுக்குள் புதுப்பிப்பு பணிகளை முடிக்கவும், ரூ.5.54 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில் ராசி பில்டர்ஸ், ஈஸ்வரி கன்ஸ்ட்ரன்ஷன்ஸ், ஸ்ரீ ராகவேந்திர பில்டர்ஸ், கியூப் இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்கள் போட்டியில் இருந்தன. இதில் ராசி பில்டர்ஸ் நிறுவனம் ரூ.3.78 கோடிக்கு டெண்டர் எடுத்துள்ளது.

இது மதிப்பீட்டு தொகையை விடவும் 32% குறைவாக டெண்டர் கோரி போட்டியில் வென்றிருக்கிறது. தவெக ஆட்சியில் மதிப்பீட்டு தொகையை விட குறைவாக கோரி டெண்டர் எடுக்கப்படுவது வாடிக்கையாக மாறியுள்ளது. இருப்பினும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணி தொடர்பாக ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டப்பட்டது.
குறிப்பாக முதல்வர் அலுவலகம் மாற்றம் செய்வதற்கு எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு. முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடிக்கு மாற்றும் பணிக்காக ரூ.6.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வெளியாகும் அரசின் முதல் அதிகாரப்பூர்வ தகவல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
