கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல்
சென்னை: நடிகர் விஜய் திங்கள்கிழமை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதில் அவரது கல்வித் தகுதி, சொத்து உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளது. விஜய் 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளை தனித்தேர்வாளராக எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கல்லூரி படிப்பையும் முடிக்கவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் தவெக கட்சி இந்த சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடுகிறது. எந்த கட்சி உடனும் கூட்டணி அமையாத சூழலில் தவெக தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் மாநிலத்தில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜய்
அதில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் விஜய் நேற்று திங்கள்கிழமை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தார். தொடர்ந்து பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த விஜய், அங்கிருந்து கொளத்தூரிலும் சிறிது நேரம் பிரச்சாரம் செய்தார். இருப்பினும், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அவரது பிரச்சாரம் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
சொத்து மதிப்பு
பொதுவாக ஒருவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும்போது, அதில் தனது விவரங்கள், கல்வித் தகுதி, சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி விஜய் தனது வேட்புமனுவுடன் சமர்ப்பித்துள்ள பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை அறிவித்துள்ளார் நடிகர் விஜய் தனது சொத்து மதிப்பு ₹645 கோடி என குறிப்பிட்டுள்ளார்.. அசையும் சொத்து, அசையா சொத்து, சேமிப்பு என எல்லாம் சேர்த்து விஜய்க்கு ரூ.645 கோடி சொத்து மதிப்பாக உள்ளது.
கொடைக்கானலில் அவருக்குச் சொந்தமாக 2 எஸ்டேட்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். விஜய்க்குத் தமிழகத்தில் பல இடங்களில் சொத்து இருக்கிறது. அதை எல்லாம் அவர் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் கடந்த 25 ஆண்டுகளில் விஜய் தனது குடும்பத்தினர் பெயரில் எந்தவொரு சொத்துகளையும் வாங்கவில்லை. அனைத்தையும் தனது பெயரிலேயே வாங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
கார்கள்
விஜய் பெயரில் இப்போது 5 கார்கள் இருக்கிறது. ரூ.3 கோடி மதிப்புள்ள Toyato Lexus 350, ரூ.2 கோடி மதிப்புள்ள BMW 17 கார், ரூ.1.6 கோடி மதிப்புள்ள Toyato Vellfire, ரூ.80 லட்சம் மதிப்புள்ள L BMW 530, ரூ.5.35 லட்சம் மதிப்புள்ள மாருதி சுவிப்ட் என 5 கார்கள் உள்ளன. இந்தச் சூழலில் தான் அவர் கடந்த ஆண்டு ₹67,000-க்கு TVS XL மொபெட் வாங்கியுள்ளார். அவர் தனது வீட்டில் வேலை செய்யும் நபருக்காக இதை வாங்கியிருக்கலாம் என தெரிகிறது.
படிப்பு
அதேபோல விஜய் தனது வேட்புமனுவில் கல்வித் தகுதி குறித்த விவரங்களையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளை தனித்தேர்வாளராக எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் லயோலா கல்லூரியில் BSc விஸ்காம் படிப்பில் சேர்ந்த நிலையில், அதை முடிக்காமல் பாதியில் கைவிட்டதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications