விஜய் - அமித்ஷா பேச்சுவார்த்தைக்கு நான் ஏற்பாடு செய்யலைங்க.. நயினார் நாகேந்திரன் பதிலால் சந்தேகம்!
சென்னை: தவெக தலைவர் விஜய்யுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினாரா என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இந்த சந்திப்பிற்காக எந்த ஏற்பாட்டையும் நான் செய்யவில்லை என்று கூறிய அவர், நான் பேசுவதற்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம், தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. தவெகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் அமைதியாகிவிட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த 5 நாட்களாக எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே தவெகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா திடீரென தனி விமானம் மூலமாக டெல்லி பயணித்துள்ளார். டெல்லியில் ஆதவ் அர்ஜுனா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் ஆதவ் அர்ஜுனா கமாண்டோ பாதுகாப்புடன் சென்றிருப்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஆதவ் அர்ஜுனாவுடன் சில பாஜக நிர்வாகிகளும் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக்கான சந்திப்பா அல்லது கரூர் விவகாரத்தில் இருந்து காப்பாற்ற சந்திக்கிறாரா என்ற விவாதங்களும் நடந்து வருகின்றன. ஏனென்றால் கரூர் விவகாரத்தில் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தவெக தலைவர் விஜய்யுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாக தகவல் வெளியாகியது. தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய்யுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினாரா என்பது எனக்கு தெரியாது. அதற்காக நான் ஏற்பாடு செய்யவில்லை. நான் விஜய்யிடம் பேசவும் வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரனின் பதில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் விஜய்யுடன் அமித்ஷா பேசினாரா என்ற கேள்விக்கு, அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் விஜய்யுடன் பேசிய பின்னரே ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு தனி விமானம் மூலமாக புறப்பட்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications