தாளாத துக்கம்.. கண்ணாடி பேழையில் விஜயகாந்த் உடலை பார்த்ததும் விஜய் ஆண்டனி செய்த செயல்.. உருக்கம்
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்தின் உடலை பார்த்ததும் அவர் செய்தி செயல் அனைவரையும் கண்கலங்க செய்தது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையை அவரது உடல்நலக்குறைவு முடக்கிப்போட்டது.
இதையடுத்து தேர்தல் கூட்டணி, பிரசாரம் உள்ளிட்டவற்றை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பார்த்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த மாதம் அவரது உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த மாதம் 18 ம் தேதி முதல் கடந்த 12ம் தேதி வரை சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதனால் அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் கட்சியின் பொதுச்செயலாளராக விஜயகாந்த் முன்னிலையில் பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தான் 3 நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பேழையின் மேல் மாலை அணிவித்த விஜய் ஆண்டனி விஜயகாந்தின் முகத்தை பார்த்தபடி கண்கலங்கி நின்றார்.
அதன்பிறகு அவர் திடீரென்று விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பேழைக்கு முத்தமிட்டு வணங்கினார். இது பார்ப்போரை கண்கலங்க செய்தது. மேலும் அவர் அருகே நின்ற விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, 2 மகன்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து சோகமாக புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications