ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா
சென்னை: தவெக தலைவரும் நடிகருமான விஜய் பெரம்பூரில் போட்டியிடும் சூழலில் அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் அவர் தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். பல சொகுசு கார்களை வைத்திருக்கும் விஜய், சுவாரசியமாகக் கடந்தாண்டு ரூ.67,000க்கு டிவிஎஸ் XL மொபெட் வாங்கியுள்ளதாகத் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தவெக இந்த முறை மாநிலத்தில் உள்ள அனைத்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் இந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதில் பெரம்பூர் தொகுதியில் இன்று விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சொத்து விவரம்
வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஒருவரது சொத்து மதிப்பு விவரங்களைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி விஜய் பெயரில் மொத்தம் ரூ. 404.58 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளாக உள்ளன. அதேபோல தனது பெயரில் ரூ. 11.51 கோடிக்கு அசையா சொத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 110 சவரன் தங்க நகைகள் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தனது ஐந்து கார்களும் உள்ளன என்றும், கடன் ஏதுவும் இல்லை என்றும் விஜய் தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
மனைவி சொத்து விவரம்
அதேபோல மனைவி சங்கீதாவின் சொத்து விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் விவாகரத்து இறுதியாகவில்லை என்பதால் தனது மனைவி சொத்து விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் தன் மனைவி சங்கீதாவுக்கு சுமார் 391 சவரன் நகைகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு கிலோ வெள்ளி, 134.91 கேரட் வைரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி மொத்தம் தன் மனைவி சங்கீதாவுக்கு ரூ.15,51,79,421 மதிப்பிலான சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
டூவீலர்
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 5 சொகுசு கார்களை வைத்துள்ள விஜய், கடந்த ஆண்டு தான் டிவிஎஸ் XL டூவிலரை வாங்கியிருக்கிறார். அதாவது விஜய்யிடம் ரூ.3 கோடி மதிப்புள்ள Toyato Lexus 350, ரூ.2 கோடி மதிப்புள்ள BMW 17 கார், ரூ.1.6 கோடி மதிப்புள்ள Toyato Vellfire, ரூ.80 லட்சம் மதிப்புள்ள L BMW 530, ரூ.5.35 லட்சம் மதிப்புள்ள மாருதி சுவிப்ட் கார்கள் உள்ளன.
இந்தச் சூழலில் தான் கடந்தாண்டு அவர் ரூ.67,000க்கு அவர் டிவிஎஸ் XL மொபெட் வாங்கியுள்ளதாகத் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வீட்டில் வேலை செய்யும் நபருக்காக இந்த டூவீலரை வாங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. அவர் எதற்காக டிவிஎஸ் XL டூவீலரை வாங்கினார் என்பது தொடர்பான விவரங்கள் வேட்புமனுவில் தாக்கல் செய்யப்படவில்லை. இருப்பினும், அவர் தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர் யாருக்காவது வாங்கியிருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications