ஜோதிடர் ராதன் பண்டிட்டுக்கு முதல்வர் விஜய் செக்? புதிய ஜோதிடரின் வருகையால் பரபரப்பு!
சென்னை: அரசியல் களத்தில் அதிவேகமாக உச்சிக்குச் செல்வதும், அடுத்த கணமே சத்தமில்லாமல் கீழே விழுவதும் புதிய விஷயமல்ல. ஆனால், தமிழக தலைமைச் செயலக வட்டாரத்தில் மிகக் குறுகிய காலத்தில் உச்சக்கட்ட அதிகார மையமாக உருவெடுத்து, தற்போது அதே தலைமைச் செயலகத்திற்குள் நுழையவே தடை விதிக்கப்பட்டிருக்கும் பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலின் திடீர் வெளியேற்றம் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிர வைத்துள்ளது.
அதேநேரத்தில், முதல்வர் விஜய் தற்போது வேறொரு புதிய ஜோதிடரின் ஆலோசனைகளை மட்டுமே தீவிரமாகக் கேட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
அதிகார மையத்தில் திடீர் ஆதிக்கம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களுக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறி அரசியல் வட்டாரத்திற்குள் காலடி எடுத்து வைத்தவர் தான் இந்த ராதன் பண்டிட். முக்கிய அரசியல் திருப்பங்கள் குறித்த தனது கணிப்புகளின் மூலம் பல முக்கியப் புள்ளிகளின் கவனத்தை ஈர்த்த இவர், கடந்த தேர்தலுக்கு முன்பாக விஜய்யுடன் நெருக்கமானார். தமிழக வெற்றிக் கழகத்தின் மிக முக்கிய நிழல் அதிகார மையமாகவும் மாறினார்.
விஜய்யின் தினசரி நடைமுறைகள், நெற்றியில் வைக்கும் பொட்டு முதல் வெள்ளிக்கிழமைகளில் அணியும் ஆடைகளின் நிறம் வரை அனைத்தும் இந்த ஜோதிடரின் வழிகாட்டுதலின் படியே தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதன் உச்சக்கட்டமாக, முதலமைச்சர் விஜய்யின் சிறப்புப் பணி அலுவலராகவும், ஆலோசகராகவும் ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனம் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொள்கை முடிவுகளை வகுக்க வேண்டிய இடத்தில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை விடுத்து, ஜோதிடருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதா என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பின.
இந்து சமய அறநிலையத்துறைக்கு மாற்றம்
எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் விஜய் தரப்பு ஒரு முக்கிய முடிவை எடுத்தது. அதன்படி, முதலமைச்சர் அலுவலகத்தின் நேரடிப் பொறுப்புகளில் இருந்து ராதன் பண்டிட் விடுவிக்கப்பட்டார்.
எனினும், அவரை முழுமையாக நீக்காமல், இந்து சமய அறநிலையத்துறையில் 'சிறப்பு அதிகாரியாக' நியமிக்கப்பட்டார். ஆன்மிகம் மற்றும் கோவில் விவகாரங்களில் அவருக்கு இருந்த ஈடுபாடு சர்ச்சைகளைத் தணிக்கும் என்று தலைமை நம்பியது. தொடக்கத்தில் அவரும் அமைதியாகத் தனது பணிகளைக் கவனித்து வந்ததால் சூழல் தற்காலிகமாக அமைதியடைந்தது.
எல்லை மீறிய தலையீடுகள்
ஆனால், அந்த அமைதி நீண்ட காலம் நீடிக்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறையிலும் ராதன் பண்டிட்டின் தலையீடுகள் எல்லை மீறத் தொடங்கின. முக்கியத் திருக்கோவில்களின் நிர்வாக விவகாரங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் அன்றாடப் பணிகளில் அவர் தேவையின்றித் தலையிட்டதாகப் புகார்கள் எழுந்தன.
குறிப்பாக, முதலமைச்சரின் நேரடி ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறி, அரசு விதிகளையும் நடைமுறைகளையும் மீறி முடிவுகளை எடுக்குமாறு மூத்த அதிகாரிகளை அவர் மிரட்டும் தொனியில் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அரசு நிர்வாகத்தில் முதலமைச்சர் விஜய்யின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி அதிகாரம் செலுத்தியது விதிகளுக்குப் புறம்பான கடுமையான நெறிமீறலாகப் பார்க்கப்பட்டது. இதனால் துறையின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்து, தலைமைச் செயலகத்தின் உயரதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாகப் புகார்களை அனுப்பினர்.
அதிரடி நடவடிக்கை: கோட்டைக்குள் நுழையத் தடை
விவகாரம் பூதாகரமாக வெடித்ததை உணர்ந்த விஜய் தரப்பு தாமதிக்காமல் கடும் நடவடிக்கையில் இறங்கியது. ராதன் பண்டிட் வகித்து வந்த இந்து சமய அறநிலையத்துறையின் 'சிறப்பு அதிகாரி' பதவி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
அத்துடன் நில்லாமல், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலக வளாகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களுக்குள் அவர் நுழைவதைத் தடுக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்குக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அவருக்கும் அரசுக்கும் இடையிலான அனைத்துத் தொடர்புகளும் ஒரேயடியாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.
தற்போது ராதன் பண்டிட்டை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, புதிய ஜோதிடர் ஒருவரை விஜய் தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும், அவரது வார்த்தைகளுக்கு மட்டுமே தற்போது முக்கியத்துவம் தரப்படுவதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட நம்பிக்கைகளை அரசு அதிகாரத்துடன் கலக்க முயன்றதால் ராதன் பண்டிட்டின் செல்வாக்கு சரிந்துள்ளது. கோட்டையை ஆள நினைத்த ஜோதிடருக்குக் கிரகங்கள் கை கொடுக்காமல் போனதே தற்போதைய அரசியல் பேச்சாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications
